புதன், 28 டிசம்பர், 2022

விரைவில் ’மக்கள் ஐடி’ – தமிழக மக்களை அடையாளப்படுத்த அரசு திட்டம்

 27 12 2022


தமிழ்நாட்டில் வசிப்பவர்களை அடையாளப்படுத்தும் வகையில் ஒவ்வொருவருக்கும் தனி அடையாள எண் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் வசிக்கும் மக்களுக்கு மத்திய அரசு ஆதார் எண் வழங்கியதைப் போன்று தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் தனி அடையாள எண் வழங்க தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம், மாநில குடும்ப தரவுத்தளம் உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் 10 முதல் 12 இலக்கம் கொண்ட மக்கள் எண் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அரசுத் துறைகளின் தரவுத்தளங்களை ஒப்பிட்டு அடையாள எண் ஒதுக்கப்படும் போது, பெற்றோர் பெயர், பிறந்த தேதி, முகவரி, அலைபேசி எண் உள்ளிட்டவற்றுடன் குடும்ப விவரங்கள் சேகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் வசிப்பவர்களின் விவரங்களை சேகரிப்பதால் அரசின் சேவை வழங்கல் ஒழுங்குபடுத்தப்படும் எனவும், அரசின் கொள்கை வகுப்பாளர்கள் சரியான முடிவுகளை எடுக்க இந்த தரவுகள் உதவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/soon-makkal-id-government-project-to-identify-people-of-tamil-nadu.html