வியாழன், 29 டிசம்பர், 2022

கோவிட்-19 தடுப்பூசி 3வது டோஸ்; கடுமையான நோய், உயிரிழப்பைத் தடுக்கும் – WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி

 28 12 2022 

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், கோவிட்-19 படிப்படியாக உள்ளூர் நோயாக நிலைபெற்று வருவதாகவும், சுவாச நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்கும், தொற்றுநோயைத் தடுப்பதற்கும் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பூசியின் பலன்கள் மற்றும் இந்தியர்களுக்கு நான்காவது தடுப்பூசி தேவையா என்பதைப் பற்றியும் பேசினார்.

கோவிட்-19-ன் பரவும் வழியைக் கணிப்பது கடினமாக இருந்தாலும், அது படிப்படியாக ஒரு உள்ளூர் தொற்றுநோயாக மாறும். அது வரை, தடுப்பூசி ஒரு முக்கிய மற்றும் சக்திவாய்ந்த தடுப்பு கருவியாக இருக்கும். “தடுப்பூசிகளுக்கான அணுகல் தொடர்பாக உலகளவில் இன்னும் சமத்துவமின்மை உள்ளது. இது கவனிக்கப்பட வேண்டும். இதுவரை, அசல் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இரண்டு தவனை தடுப்பூசிகள் கிடைக்காத அனைத்து நாடுகளிலும் போடப்பட வேண்டும்” என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன்.

சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் கோவிட் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. நம் நாட்டுக்கு அதிக வெளிநாட்டு விமானங்கள் வருவதைக் கருத்தில் கொண்டு, ஒரு புதிய தொற்று அலையைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா?

உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பவும், கோவிட் பற்றி மறந்துவிடவும் முயற்சிக்கும் போது, கணிக்க முடியாத ஒன்று மற்றும் நிலைமையை மாற்றக்கூடிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கவலையான வைரஸ் மாறுபாடு (VoCs) தோன்றுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் செய்தது போல் அடுத்த ஆண்டும் வைரஸின் புதிய வகைகள் வெளிப்படும். வைரஸ் தொடர்ந்து மாற்றமடைந்து உருவாகி வருகிறது. மேலும், ஒவ்வொரு புதிய வைரஸ் மாறுபாட்டிற்கும் பரவும் தன்மையில் ஒரு நன்மை இருக்கும். ஆனால் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தவிர்ப்பதில் ஒரு மாறுபாடு சிறப்பாக இருந்தால் மட்டுமே கவலையளிக்கும் வைரஸ் மாறுபாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனத்தால் புதிய வகை என்று எண்கள் வழங்கப்படும். மேலும், புதிய வைரஸ் மாறுபாடுகள் கடுமையான நோய்களை ஏற்படுத்துகிறது அல்லது தற்போது புழக்கத்தில் உள்ளதை விட அதிகமாக பரவுகிறது.

சீனாவில் இப்போது என்ன நடக்கிறது என்பது 2022-ம் ஆண்டில் குறைந்த அளவு வைரஸ் பரவிய மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கிய நாடுகளில் முன்பு காணப்பட்டதைப் போன்றது. சீனர்கள் இயற்கையான நோய்த்தொற்றுக்கு ஆளாகாததாலும், தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதாலும், மேலும் பல முதியோர்கள் முதல் தடுப்பூசியைக் கூடப் பெறாததால், அதிக அளவு பூஸ்டர் டோஸ்கள் இல்லாததாலும் அந்நாட்டு மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் ஓமிக்ரான் துணை வகை வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள். இப்போதைக்கு, பரவலில் இருக்கும் வைரஸ் மாறுபாடுகள் உலகின் பிற பகுதிகளில் காணப்படுவதைப் போலவே உள்ளன. மேலும், வெளிவரும் மாறுபாடுகளை நாம் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.

அசல் வைரஸ் மற்றும் ஓமிக்ரான் மாறுபாடு இரண்டிலிருந்தும் ஆன்டிஜென்களைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட பைவலன்ட் தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை. அவை பரந்த நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதில் சிறந்தவை என்று நிரூபிக்கப்பட்டாலும், எம்.ஆர்.என்.ஏ (mRNA) தடுப்பூசிகள் மட்டுமே இதுவரை இந்த கலவையுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பைவலண்ட் தடுப்பூசிகள் பூஸ்டராகப் பயன்படுத்தப்படும்போது அசல் தடுப்பூசியை விட சற்று உயர்ந்ததாக இருக்கலாம. ஆனால், அசல் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் ஒரு நல்ல ஊக்கத்தை அளிக்கிறது. பைவலன்ட் தடுப்பூசிகள் கிடைக்காத அனைத்து நாடுகளிலும் அதை பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்தியர்களுக்கு நான்காவது டோஸ் தேவையா?

இது நபரின் வயது, பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி, அடிப்படை நிலைமைகள் மற்றும் மூன்றாவது தடுப்பூசிக்குப் பிறகு, எவ்வளவு காலம் ஆகிறது என்பது உட்பட பல காரணிகளைப் பொறுத்தது. அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு (வயதானவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் போன்றவர்கள்), நான்காவது டோஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேலும் அதிகரிக்கும். நோய்க்கு எதிராக அதிக பாதுகாப்பை வழங்கும் (இது தற்காலிகமாக இருக்கலாம்). பாதுகாப்பு நோய் எதிர்ப்புச் சக்தியின் காலம் மற்றும் நோய் எதிர்ப்பு ஊக்கியாகப் பயன்படுத்தப்பட வேண்டிய தடுப்பூசியின் வகை குறித்து கூடுதல் ஆராய்ச்சி தேவை. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில், மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பூசி சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இது நோய் எதிர்ப்பு ஊக்கியாகப் பயன்படுத்தப்படும் போது சுவாசப்பாதை நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவது தொற்றுநோயைத் தடுப்பது போன்ற நன்மைகளை வழங்கக்கூடும். ஆனால், இதற்கு கவனமாக ஆய்வுகள் தேவை.

நமக்கு வருடாந்திர பூஸ்டர் தடுப்பூசி தேவையா?

நமக்கு அதிர்ஷ்டவசமாக, வைரஸின் அசல் வுஹான் மாறுபாட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள், கவலை அளிக்கும் ஒமிக்ரான் வைரஸ் மாறுபாடு நோய்த்தொற்றுக்கு எதிரான செயல்திறன் குறைந்துவிட்டாலும், கடுமையான நோய் மற்றும் மரணத்தைத் தடுப்பதில் இன்னும் சிறப்பாக இருப்பினும், ஒரு பரந்த மற்றும் நீடித்த நோயெதிர்ப்பு மறுமொழியை அதிகரிக்க மூன்று டோஸ்கள் (இரண்டு முதன்மை மற்றும் ஒரு பூஸ்டர்) தேவை. வருடாந்திர பூஸ்டர் தேவையா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. ஆனால், நோயெதிர்ப்பு சக்தி காலப்போக்கில் குறைந்து வருவதை நாம் அறிவோம் .குறிப்பாக வயதானவர்களில். முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் – குறிப்பாக வயதானவர்கள் அல்லது நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்கள் – பூஸ்டர் டோஸ்களைப் பெறுவதை உறுதிசெய்ய ஒரு புதிய வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையைத் தூண்ட வேண்டும்.

கோவிட்-19 -க்கு முன்னே செல்லும் வழி என்ன?

கோவிட்-19-ஐ கணிப்பது கடினம் என்றாலும், அது படிப்படியாக ஒரு உள்ளூர் தொற்றுநோயாக நிலைபெறும். அது நோயையோ மரணத்தையோ ஏற்படுத்தாது என்று அர்த்தமல்ல – கடந்த வாரம், உலக சுகாதார நிறுவனம் 10,000 இறப்புகளைப் பதிவுசெய்தது. இது இன்னும் அதிகமாக உள்ளது. ஆரம்பகால நோயறிதல் மற்றும் ஆதரவான சிகிச்சை போன்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் உட்பட கிடைக்கக்கூடிய அனைத்து கருவிகளையும் நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். மேலும், கூட்டத்தைத் தவிர்ப்பதன் மூலமும், நோய்வாய்ப்பட்டிருக்கும்போது வீட்டிலேயே தங்கியிருப்பதன் மூலமும், நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிவதன் மூலமும், அறைகளுக்கு உள்ளே காற்றோட்டத்தை மேம்படுத்துவதன் மூலமும் தொற்று பரவல் ஆபத்தைத் தொடர்ந்து குறைக்கலாம். இந்த முன்னெச்சரிக்கைகள் கோவிட் மட்டுமின்றி மற்ற சுவாச தொற்றுகளையும் தடுக்க உதவும். தனிமைப்படுத்தப்பட்ட வைரஸ்களின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால், நோய் மேலாண்மையில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நமக்குத் தெரிவிக்கும்.

தொற்றுநோய்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

தடுப்பூசி ஒரு முக்கிய, சக்திவாய்ந்த தடுப்பு கருவியாக உள்ளது. தடுப்பூசிகளுக்கான அணுகல் தொடர்பாக உலகளவில் இன்னும் சமத்துவமின்மை உள்ளது, இது கவனிக்கப்பட வேண்டும். குறுகிய காலத்தில், சில நாடுகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை விரிவுபடுத்த சுகாதார அமைப்பு ஆதரவு தேவை. நீண்ட காலத்திற்கு, சுகாதார அமைப்பை வலுப்படுத்துதல், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆய்வகத் திறன் ஆகியவற்றில் முதலீடுகள், விநியோகிக்கப்பட்ட உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவை தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் முக்கிய உத்திகளாக இருக்கும்.


source https://tamil.indianexpress.com/lifestyle/who-chief-scientist-soumya-swaminathan-talks-about-covid-19-nasal-vaccine-566847/