சனி, 31 டிசம்பர், 2022

சிலிண்டர் வெடிப்பு; ஆளுநர் கருத்து அவசியமற்றது- முதலமைச்சர்

 

31 12 2022

கோவை சிலிண்டர் வெடிப்பில் ஆளுநர் ரவி கூறிய கருத்து அவசியமற்றது; அவசரமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், நமது அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக உணர்கிறோம். நமது மூத்த தேச நிறுவனத் தந்தைகள் எங்களிடம் ஒப்படைத்த அடிப்படை மதிப்புகள் மற்றும் கொள்கைகளில் எந்த ஆபத்தும் இருக்கக்கூடாது.

நமது அரசியலமைப்பு நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று விரும்பும் நாங்கள், இந்திய தேசிய காங்கிரசை உள்ளடக்கிய ஒரு தேசிய கூட்டணியை முன்மொழிகிறோம். தமிழகத்தில் தி.மு.க., ஏற்கனவே அப்படி ஒரு கூட்டணியை அமைத்து, அதை மற்ற இடங்களில் செயல்படுத்தும் வெற்றிகரமான மாதிரியாக மாற்றியுள்ளது.

தமிழ்நாடு அமைதியான மாநிலம் ஆகும். இந்தியாவே எரிந்த காலத்திலும் இது அமைதியாகவே இருக்கும். அரசியல் வேறு, மதம் வேறு என்ற அரசியல் அறிவும் பகுத்தறிவும் நிறைந்த மக்கள், தமிழ் மக்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று சிலர் ஏமாந்து போய் கிடக்கிறார்கள். அவர்கள் தான் வன்முறை நிகழ்ந்து விடாதா என ஏக்கமாக அலைகிறார்கள்.

கோவை சிலிண்டர் வெடிப்பில் ஆளுநர் ரவி கூறிய கருத்து அவசியமற்றது, அவசரமானது. அந்த வழக்கை மூன்றே நாளில் என்.ஐ.ஏ.வின் விசாரணைக்கு நாங்கள் ஒப்படைத்தோம். கர்நாடக பா.ஜ.க. அரசு இதே போன்ற சம்பவத்தை ஆறு நாள் கழித்து தான் ஒப்படைத்தது. பதினைந்து நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்பது தான் விதி ஆகும். ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு வந்தவர் இப்படி அவசரப்பட்டு கருத்து கூறுகிறாரே என்று ஆச்சர்யப்பட்டேன், ஆதங்கப்பட்டேன்.

ஆனால் அவரது உள்நோக்கத்தை ஜனநாயக ரீதியில் தங்கள் வாக்குகள் மூலம் மாநில நிர்வாகப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த மக்களிடம் விட்டு விட்டு நான் மக்களுக்கான பணிகளில் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறேன். அரசியல் சட் டத்தைப் படித்துப் பார்க்கும் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணக்கமாகவே இருக்க விரும்புவார்கள். ஆனால் நியமன ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அடக்கி ஆள நினைப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே கேலிக் கூத்தாக்குவது ஆகும். கோடிக்கணக்கான மக்களின் ஜனநாயக உரிமையை அவமானப்படுத்துவது ஆகும்.

குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி மற்ற மாநிலங்களின் பார்வையில் தமிழகத்தை சிறுமைப்படுத்தும் முயற்சியாகும். மக்கள் பிரதிநிதிகள் நிரம்பிய சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்டமும், தீர்மானமும் ஆளுநரால் நிறுத்தி வைக்கப்படுமானால், அரசியல் சட்டத்தை செயலிழக்க வைக்கிறார்கள் என அர்த்தமாகிறது. இது பிரிட்டிஷ் ஆட்சியைவிட மோசமான பாணியாகும்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. பிரதான எதிர்க்கட்சி அல்ல! 2001 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நான்கு சட்டமன்ற உறுப்பி னர்களைப் பெற்றது. இருபது ஆண்டுகள் கழித்து அ.தி.மு.க. தோளில் ஏறி பா.ஜ.க. 4 தொகுதிகளைப் பெற்றுள்ளது. இதுதான் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் பலம். சொந்தக் காலில் நின்று அவர்களால் வெற்றி பெற முடியாது. மத்திய அளவில் ஆளும்கட்சியாக இருப்பதால் இங்கு அவர்களுக்கு பப்ளிசிட்டி தாராளமாக தரப்படுகிறதே தவிர, தமிழ்நாட்டில் அவர்களுக்கு இருக்கும் பலத்தை வைத்து அல்ல.

அ.தி.மு.க.வை பயமுறுத்தி, பணிய வைத்து அதில் குளிர்காய பா.ஜ.க. நினைக்கிறது. மற்றபடி தமிழ்நாட்டில் அவர்கள் வளரவில்லை. பா.ஜ.க. வளராமல் பா.ஜ.க.வினரே பார்த்துக் கொள்வார்கள். பா.ஜ.க. பற்றித் தான் உங்கள் கேள்வி கூட இருக்கிறது. தேவையற்ற ஊடக வெளிச்சம் அவர்கள் மேல் பாய்ச்சப்பட்டும் பா.ஜ.க.வின் தவறுகள் மறைக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் மக்களிடையே மாய பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார்.

source https://news7tamil.live/coimbatore-cylinder-blast-governors-opinion-unnecessary-chief-minister.html