20 12 2022
தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் உயிர்காக்கும் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தவேண்டும் என மத்திய அரசிடம் டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு வலியுறுத்தினார்.
மாநிலங்களவையில் தாக்கலான துணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தி.மு.க. உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு பேசியதாவது: விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விளைவிக்க என்ன செலவு ஆகிறது என்பதை நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அந்தந்த காலகட்ட விலைவாசிகளை கணக்கில் கொண்டு முழுமையான அளவில் ஆய்வு நடத்தி அந்த விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களை சொந்தமாக வைத்திருப்பவர் -களுக்கு மட்டுமே அந்த ஆவணங்களின் அடிப்படையில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஆனால் ஒட்டுமொத்த விவசாயிகளில் 55 சதவீதம் பேர் சொந்தமாக விவசாய நிலம் இல்லாத விவசாயக் கூலித்தொழிலாளர்கள் தான். அவர்கள் இத்திட்டத்தின் கிழ் நிதி உதவி பெறமுடியாத சூழல் இருக்கிறது. அவர்களுக்கும் இந்த நிதி உதவி கிடைக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நதி நீர் இணைப்பு குறிப்பாக தீபகற்ப நதிகள் இணைப்பு இன்றைய காலகட்டத்தில் அவசியத் தேவையாக இருக்கிறது. ஆனால் பலப்பல ஆண்டுகளாக இது வெறும் பேச்சளவில் மட்டுமே இருந்து வருகிறது. இனிமேலாவது நதி நீர் இனைப்பை சாத்தியப்படுத்தும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுபவை தரமான தேசிய நெடுஞ்சாலைகள் தான். அந்த அடிப்படையில் தமிழகத்தில் உள்ள எட்டு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த விஷயத்திற்கு விரைந்து இறுதி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவில் ஆண்டுக்கு நான்கரை லட்சம் சாலை விபத்துகள் நடந்து, அதில் ஒன்றரை லட்சம் பேர் இறக்கிறார்கள். அதாவது ஒரு மணி நேரத்திற்கு 53 விபத்துகள் நடக்கின்றன. எனவே சாலைப் பாதுகாப்பு மற்றும் சாலை பராமரிப்பில் மத்திய அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் எண்ணத்தில் உதித்த அற்புதமான ஒரு திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியிருக்கிறது. இதன்படி, தமிழகத்தில் எந்த இடத்திலும் விபத்தில் சிக்கி படுகாயமடையும் ஒரு நபர், சிகிச்சைக்கான செலவு பற்றி கவலைப்படாமல், அருகிலுள்ள எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சிகிச்சையை இலவசமாகப் பெறலாம். உயிர்காக்கும் உன்னதமான இந்தத் திட்டத்தை நாடு முழுக்க அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நான்காண்டுகளுக்கு முன்பு பிரதமர் அடிக்கல் நாட்டியது அப்படியே கிடப்பில் இருக்கிறது. ஒரு சுவர் கூட கட்டப்படவில்லை. 2019 ல் அடிக்கல் நாட்டியபோது இதன் திட்ட மதிப்பீடு 1264 கோடியாக இருந்தது, இப்போது 2000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்காக ஜப்பான் நிதி நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பணிகளை விரைவுபடுத்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவாவது பிரதமரே வந்து அதை திறந்துவைக்கும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க வேண்டும் என்று கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தினார்.