சனி, 31 டிசம்பர், 2022

மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் அனுமதி இல்லை: போலீஸ் கட்டுப்பாடு முழு விவரம்

 31 12 2022

மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் அனுமதி இல்லை: போலீஸ் கட்டுப்பாடு முழு விவரம்
சென்னை கடற்கரைகளில் இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

சென்னையில் உள்ள கடற்கரைகளில் இன்று (டிசம்பர் 31ஆம் தேதி) இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும், இன்று மாலை 6 மணிக்கு மேல் கும்பலாக பொதுமக்கள் வாகனங்களில் செல்லக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2023ஆம் ஆண்டின் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்க பொதுமக்கள் அதற்கு முதல் நாளில் இருந்தே ஆர்வமாக தயாராவது வழக்கமான ஒன்று. அந்த நிலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக தமிழக காவல்துறை இன்று முதல் (டிசம்பர் 31ஆம் தேதி) ஒருசில கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்று (டிசம்பர் 31ஆம் தேதி) இரவு 8 மணி முதல் மெரினா காமராஜர் சாலை, எலியட்ஸ் கடற்கரையில் (பெசன்ட் நகர்) போக்குவரத்திற்கு காவல்துறை தடை விடுத்துள்ளனர்.

மேலும், டிசம்பர் 31ஆம் தேதியில் இருந்து ஜனவரி 1 வரை (புத்தாண்டு தினம்) சென்னை கடற்கரைகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1ஆம் தேதியான புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் மக்கள் கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நட்சத்திர விடுதிகளில் 80% நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, நட்சத்திர விடுதிகளில் நீச்சல் குலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் வருகைத்தரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/new-year-celebration-restrictions-by-chennai-police-31st-december-2022-568147/