திங்கள், 26 டிசம்பர், 2022

உத்தரகாசியில் கிறிஸ்தவ மிஸினரிகள் மீது தாக்குதல்.. வழக்குப்பதிவு

 

26 12 2022 

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் கிறிஸ்துமஸுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, கட்டாய மதமாற்றம் செய்ததாகக் கூறி, கிறிஸ்தவ மிஷனரிகள் குழுவை 30க்கும் மேற்பட்டோர் தடிகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்தனர், அதன் அடிப்படையில் புரோலா காவல் நிலையத்தில், “இரு தரப்பை சேர்ந்தவர்கள் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்ஐஆர்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, நிலைமை கட்டுக்குள் உள்ளது.

இது குறித்த போலீசார் கூறுகையில், “முசோரியில் உள்ள யூனியன் தேவாலயத்தைச் சேர்ந்த பாஸ்டர் லாசரஸ் கொர்னேலியஸ் மற்றும் அவரது மனைவி சுஷ்மா கொர்னேலியஸ் ஆகியோர் சிவாலா கிராமத்தில் கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தில் பிரார்த்தனைக்கு தலைமை தாங்கினர்.
உள்ளூர் குழு சம்பவ இடத்திற்கு வந்தது. மத மாற்றம் தொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலின் போது இரு குழுக்களைச் சேர்ந்தவர்களும் தாக்கிக் கொண்டனர்” எனத் தெரிவித்தார்.

மேலும், புரோலா காவல் நிலைய அதிகாரி (எஸ்ஓ) கோமல் சிங் ராவத் கூறுகையில், “சிவாலா கிராமத்திற்கு வெளியாட்கள் சிலர் வந்து மதமாற்றம் செய்வதாக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) வீரேந்திர சிங் ராவத் தலைமையிலான உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர். மேலும் இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வீரேந்திர சிங் ராவத் அளித்த புகாரின் அடிப்படையில், பாதிரியார் மற்றும் பிறருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம்.

பின்னர் எதிர் தரப்பிலிருந்து புகார் கொடுக்கப்பட்டது, உள்ளூர் மக்கள் வந்தபோது அவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டதாகவும், அவர்களின் வாகனத்தை சேதப்படுத்தும் போது அவர்களை அடித்ததாகவும் கூறினர். அந்த புகாரின் பேரில் நாங்கள் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம்” என்றார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராவத் கூறினார்.
உள்ளூர்வாசிகளின் புகாரின் மீது பிரிவு 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், குடியிருப்பு, மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்), 323 ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஐபிசி 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே காயப்படுத்துதல்) மற்றும் உத்தரகாண்ட் மத சுதந்திரச் சட்டம், 2018 இன் பிரிவு 3/5 கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மீது IPC யின் பிரிவுகள் 147 (கலவரம்), 153 A, 323, 504, 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்), மற்றும் 427 (சேதத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


source https://tamil.indianexpress.com/india/christian-missionaries-attacked-over-allegations-of-conversion-in-uttarakhands-uttarkashi-564892/