வெள்ளி, 30 டிசம்பர், 2022

விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடிய போட்டோஷாப் கட்சித் தலைவர்’: ஸ்கூப் நியூஸ் சொல்லும் செந்தில் பாலாஜி

 

30 12 2022

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சியினர் மீது ட்விட்டரில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். மேலும், ட்விட்டரில் நேரடியாகவும், கலாய் செய்யும் வகையிலும் இவர் முன்வைத்து வரும் விமர்சனங்கள் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருவதுடன், மீம் கிரியேட்டர்களும் செந்தில் பாலாஜியின் கருத்துக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி ஸ்கூப் நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் சமீபத்திய ட்விட்டர் பதிவில், கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.

விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை?” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி பதிவிட்டுள்ளார்.

ஆனால், அவரது பதிவில் “இவர்கள் தான் அஅவர்கள்” என்று குறிப்பிடாமல் சூசகமாக ‘போட்டோஷாப் கட்சித் தலைவர்’, ‘இளைஞரணியின் தேசியத் தலைவர்’ என்று பதிவிட்டுள்ளார். எனினும், அவர் குறிப்பிட்ட அந்த தலைவர்களை இணையவாசிகள் கண்டுபிடித்து விட்டதாகவும், அவர்கள் யார் என்றும் அடையாளம் காட்டி, அந்த பதிவின் கீழ் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-ministr-senthil-balaji-recent-tweet-on-photoshop-party-leader-apology-letter-in-flight-567347/