புதன், 28 டிசம்பர், 2022

சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

 27 12 2022

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 9:40 மணியளவில் இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஏர் லங்கா விமானத்தில் 70 பயணிகள் வந்தனர். அவர்களுள், சீனாவில் இருந்து இலங்கை மூலம் மதுரை வந்த பயணிகளிடம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் பிரதிபா என்ற பெண் மற்றும் அவரது 6 வயது மகளான பிரித்தியங்கார ரிகா ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பிரதிபாவின் கணவர் சுப்பிரமணியம் சீனாவில் வேலை செய்து வந்துள்ளார். அவருடன் பிரதிபா மற்றும் பிரித்தியங்கார ரிகா தங்கியிருந்துள்ளனர். வேலையை முன்னிட்டு சுப்பிரமணியம் ஜெர்மனி சென்ற நிலையில், பிரதிபாவும் பிரித்தியங்கார ரிகாவும் தமிழகம் திரும்பியுள்ளனர்.

தொடர்ந்து, இருவருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு உருமாறிய பிஎஃப்7 கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பிரதிபா மற்றும் பிரித்தியங்கார ரிகாவின் பரிசோதனை மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து மதுரை விமான நிலையம் முழுவதும் கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களோடு இலங்கை விமானத்தில் வந்த 70 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.



source https://news7tamil.live/two-persons-who-arrived-at-madurai-airport-from-china-have-been-confirmed-to-be-infected-with-corona-virus.html