2018 மக்களவைப் பொதுத் தேர்தலில் தனித்தும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தனி கூட்டணி அமைத்தும் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு கூட்டணியில் இணைகிறதா…? இந்த தொகுப்பில் பார்ப்போம்
அரசியலுக்கு வருவார் என்று 25 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் ரஜினிகாந்த், தயங்கி பின்வாங்கி விட, அரசியலுக்கு வர மாட்டேன் என்று முன்பு சொன்ன நடிகர் கமல் கடந்த 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய ஓராண்டில் நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து களமிறங்கியது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசிதேசிய அளவில் பரபரப்பை பற்ற வைத்தார்.
மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் பல தொகுதிகளில் 10 சதவீதத்திற்கு மேல் வாக்கு பெற்று, கவனிக்கப்பட்டார். தொடர்ந்து 2021 தேர்தலிலும் மநீம தலைமையில் ஒரு கூட்டணி அமைத்தார். கடுமையான போட்டிக்கிடையில் கமல் வெற்றி வாய்ப்பை இழந்தார். கட்சிக்கு முன்பை விட வாக்கு சதவீதம் குறைந்தது. 2022 பிப்ரவரியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் முன்பை விட வாக்கு சதவீதம் குறைந்தது.
இந்நிலையில் வரும் 2024 தேர்தலில் பெரிய கூட்டணியில் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். திமுக கூட்டணியில் கமல் என்று சொல் தெரிந்து சொல் பகுதியில் நியூஸ் 7 தமிழ் முன்பே குறிப்பிட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தரும் வகையில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை டிசம்பர் 24ம் தேதி டெல்லியில் சந்திக்க உள்ளார் கமல்ஹாசன். இது தேர்தல் கூட்டணிக்கான சந்திப்பு இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தினர் சொன்னாலும் அதை நோக்கிய சந்திப்புதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
குறிப்பாக, கடந்த ஒரு மாத காலத்தில் 3 முறை கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளார் கமல். கட்சி தொடங்கிய போது நான் இடதும் இல்லை, வலதும் இல்லை. மய்யம் என்று தெளிவுபடுத்தினார். ஆனால், வரும் 2024 தேர்தலில் வலதுசாரி சித்தாந்தம் உடையதாக கூறப்படும் பாரதிய ஜனதாவிற்கு எதிர் அணியில் இருக்கு முடிவு செய்து விட்டார். அதற்கான முதற்படிதான் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க செல்ல
இருப்பது என்கிறார்கள் கட்சியினர்.
தமிழ்நாட்டில் கூட்டணிக்கு திமுக தலைமை வகித்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேசிய அளவில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் வழியாக கூட்டணிக்குள் வரும் திட்டமாகவும் இதை பார்க்கலாம் என்கிறார்கள். தலைநகர் சென்னை, கோவை உள்ளிட்ட ஏதாவது ஒரு தொகுதியில் கமல் அல்லது மக்கள் நீதி மய்ய வேட்பாளர் களமிறங்குகிறார் என்றும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில், கூட்டணி குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை என்று மீண்டும் சொல்லியுள்ள கமல், எந்தத் திசையை நோக்கி நான் சென்று கொண்டு உள்ளேன் என்பது விரைவில் உங்களுக்குப் புரியும். என் பயணத்தை நீங்கள் புரிந்து கொண்டாலே அது புரிந்து விடும் என்றும் தனிது பாணியில் செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார். என்ன செய்யப் போகிறார் கமல். பொருந்திருந்து புரிந்து கொள்வோம்…
- ஜோ மகேஸ்வரன்
source https://news7tamil.live/will-the-peoples-justice-center-join-a-single-alliance-in-2024-lok-sabha-elections-kamals-mnm-opposes-bjp-shows-interest-to-alliance-with-congress.html