21 12 2022
கர்நாடக மாநிலத்தில் பட்டியலிட்ட சாதியினர் (15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக) மற்றும் பழங்குடியினருக்கு (3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக) இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான மசோதாவை கர்நாடக அரசு செவ்வாய்க்கிழமை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தது.
முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடகா பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு மற்றும் மாநிலத்தின் கீழ் உள்ள அரசு பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகள்) மசோதா, 2022 ஐ அறிமுகப்படுத்தினார், இது அதே பெயரில் உள்ள அரசாணையை மாற்ற முயல்கிறது.
இந்த மசோதாவின் விதிகளின் சட்டப்பூர்வமான தன்மை குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கவலைகளை எழுப்பியது, இது இட ஒதுக்கீட்டின் மீதான 50 சதவீத வரம்பை மீறுகிறது.
2023 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த மசோதாவை அரசாங்கம் தாக்கல் செய்துள்ளது. பாரம்பரியமாக காங்கிரஸை ஆதரிக்கும் எஸ்.சி/எஸ்.டி வாக்கு வங்கியை ஆளும் பா.ஜ.க கண்காணித்து வருகிறது. மாநில மக்கள்தொகையில் 16 சதவீதம் எஸ்.சி.,க்கள் உள்ள நிலையில், எஸ்.டியினர் 6.9 சதவீதம் பேர் உள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் இந்தச் சட்டத்தை சேர்க்க வேண்டியிருப்பதால், சட்டத் தடைகள் இருக்கும் என்று காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் சித்தராமையா சுட்டிக்காட்டினார். அரசியலமைப்பு திருத்தம் இல்லாமல் மசோதா நிறைவேற்றப்பட்டால் அதற்கு எந்த மதிப்பும் இருக்காது என்றும் அவர் கூறினார்.
இந்த மசோதாவுக்கு அரசு கூறிய காரணங்கள்
தற்போதைய 15 சதவிகிதம் மற்றும் 3 சதவிகிதம் இடஒதுக்கீடு என்பது முந்தைய மைசூர் மாநிலம் 1948 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலமாக உருவாக்கப்பட்டு இந்திய ஒன்றியத்தில் இணைந்தபோது முடிவு செய்யப்பட்டது, அப்போது, அரசியலமைப்பின் 341 மற்றும் 342 பிரிவின் கீழ் குறிப்பிட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரை ‘பட்டியலிடப்பட்ட’ பிரிவில் குடியரசுத் தலைவர் சேர்த்தார்.
கர்நாடகாவில் பட்டியல் சாதியினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதில் அதிகமான குழுக்கள் சேர்க்கப்பட்டு, இரு சமூகத்தினரின் மக்கள் தொகையும் அதிகரித்துள்ள நிலையில், இடஒதுக்கீடு அப்படியே உள்ளது என்று அரசு மேற்கோள் காட்டியுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என எஸ்.சி- எஸ்.டி சமூகத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நீதிபதி நாக்மோகன்தாஸ் குழு அறிக்கை
2015 இல், நாயக்க மாணவர் நலக் கூட்டமைப்பு SC-ST ஒதுக்கீட்டை உயர்த்தக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில், ஜூலை 22, 2019 அன்று, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி எச்.என்.நாகமோகன்தாஸ் தலைமையில் ஒரு குழுவை கர்நாடக அரசு நியமித்தது.
அந்தக் குழு ஜூலை 2020 இல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது, பல்வேறு சமூகங்களுக்கு மத்தியில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியிருப்பதற்கான சான்றுகள் இருப்பதாகக் கூறியது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தொலைதூரப் பகுதிகளிலும், மாநிலத்தின் வறண்ட பகுதிகளிலும் வாழும் மக்களில் இத்தகைய பின்தங்கிய நிலை மிகவும் அதிகமாக உள்ளது, இங்குள்ள மக்கள் இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெற முடியவில்லை என்று அறிக்கை கூறியது. அவர்களின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும் போது, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் SC மற்றும் ST களின் போதிய பிரதிநிதித்துவம் இல்லாததற்கான சான்றுகள் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
இந்த ஆய்வின் அடிப்படையில், எஸ்.சி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 17 சதவீதமாகவும், எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 7 சதவீதமாகவும் அதிகரிக்க சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டது.
நீதிபதி சுபாஷ் ஆதி அறிக்கை கூறியது என்ன?
மார்ச் 2021 இல், பி.எஸ் எடியூரப்பாவின் தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சுபாஷ் பி ஆதி தலைமையில் மற்றொரு குழுவை அமைத்து இந்தப் பிரச்சினையை ஆய்வு செய்தது. இந்த குழு இந்த ஆண்டு ஜூலை 6-ம் தேதி தனது அறிக்கையை அளித்தது.
74 சதவீத பழங்குடியின சமூகங்கள் வெளியில் தெரியாத நிலையிலும், அவர்களின் கல்வியறிவு விகிதம் 3 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய சட்டப் பள்ளியின் ஆய்வை மேற்கோளிட்டு அறிக்கை கூறியது.
கர்நாடகாவில் உள்ள எஸ்.சி மற்றும் எஸ்.டி.,களின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள சாதிகளின் எண்ணிக்கையை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மற்ற மாநிலங்கள் குறைவான எண்ணிக்கையிலான சாதிகளை அறிவித்திருந்தாலும், அவற்றின் இடஒதுக்கீடு சதவீதம் அதிகமாக இருப்பதைக் காணலாம், என அறிக்கை குறிப்பிடுகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை உதாரணங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
sourc https://tamil.indianexpress.com/explained/karnataka-brings-in-bill-to-hike-sc-st-quota-reasons-provisions-562420/