22 12 2022
ஒமிக்ரான் வைரஸின் புதிய துணை வகையான BF.7 வைரஸ் தொற்று இந்தியாவில் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. முதல் தொற்று செப்டம்பரில் ஒடிஷாவிலும், குஜராத்தில் இராண்டாவது தொற்று செப்டம்பரிலும், மூன்றாவது தொற்று நவம்பரிலும் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில் தொற்று பரவலை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுகளைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை, பொதுமக்கள் விழிப்புணர்வை அதிகரிக்கவும், தடுப்பூசிகளின் முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தபடுவதை அதிகரிக்கவும் மாநில அரசுகளை வலியுறுத்தினார்.
தொற்றுநோய் காரணமாக சுகாதாரத் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சமூக விழிப்புணர்வை அதிகரிக்கவும், கோவிட் நோயைக் கட்டுப்படுத்தவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. புதியதாக கண்டறியப்படும் அனைத்து தொற்றுகளுக்கும் மரபணு வரிசைமுறையை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது புதிய மாறுபாட்டைக் கண்டறியவும், அதைச் சமாளிக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்கவும் உதவும். வரவிருக்கும் பண்டிகைகளை மனதில் வைத்து, முகக்கவசம் அணிவது மற்றும் சுகாதாரம் போன்ற கோவிட் தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றிய விழிப்புணர்வை மாநில அரசுகள் பரப்ப வேண்டும். தடுப்பூசி முன்னெச்சரிக்கை டோஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கவும் மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற மன்சுக் மாண்டவியா மக்களவையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
சீனாவில் தொற்றுகளை அதிகரிப்பதாகக் கூறப்படும், ஒமிக்ரான் வைரஸின் துனை வகையான BF.7 வைரஸ் தொற்று, இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது – முதல் தொற்று செப்டம்பரில் ஒடிசாவிலும், குஜராத்தில் செப்டம்பரில் இரண்டாவது தொற்றும் மூன்றாவது தொற்று நவம்பரிலும் பதிவாகியுள்ளன. குஜராத்தில், ஒமிக்ரான் துணை வகை வைரஸின் 2 தொற்றுகள் பதிவாகியுள்ளன. செப்டம்பரில் வதோதராவிலும் நவம்பரில் அகமதாபாத்திலும் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 நோயாளிகளும் குணமடைந்துள்ளனர்.
“நாம் ஏற்கனவே சர்வதேச விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு வரும் பயணிகளின் 2 சதவீத ரேண்டம் மாதிரியை தொடங்கிவிட்டோம். தொற்று தடம் கண்டறிதல், கண்காணிப்பு மற்றும் சிகிச்சை’ என கோவிட்க்கு உரிய தடுப்பு நடவடிக்கை மூலம் தொற்றுநோயை தொடர்ந்து நிர்வகிப்போம். தொற்றுநோயைக் கையாள்வதில் நாம் உறுதி ஏற்றுள்ளோம். தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தொற்றுநோயைக் கையாள்வதில் அனைத்துக் கட்சிகள் மற்றும் உறுப்பினர்களின் உதவியை நான் விரும்புகிறேன். உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும்” என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
கோவிட் -19 உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்கையையும் வாழ்வாதாரத்தையும் தொடர்ந்து பாதிக்கிறது என்று கூறிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவிய, “கடந்த மூன்று ஆண்டுகளில், கொரோனா வைரஸின் மாறிவரும் தன்மை உலகளாவிய ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில், பல நாடுகளில் கோவிட் தொற்றுகள் அதிகரிப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டில், கோவிட் தொற்று தொடர்ந்து குறைந்து வந்திருக்கிறது. தற்போது, நாடு முழுவதும் சராசரியாக 153 கோவிட் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உலகின் பிற பகுதிகளில், 5.87 லட்சம் கோவிட் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, பிரான்ஸ், கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் கோவிட் பாதிப்பு மற்றும் கோவிட் பாதிப்புகளால் ஏற்படும் இறப்புகள் இரண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக, சீனாவில் கோவிட் தொற்றுகள் கடுமையாக அதிகரித்து வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அரசு ஆரம்பத்திலிருந்தே ‘அனைத்து மாநிலங்கள் மற்றும் ‘அனைத்து சமூகம்’ அணுகுமுறையுடன் தொற்றுநோயை நிர்வகித்து வருகிறது. இதில், நமக்கு நல்ல முடிவு கிடைத்துள்ளது.” என்று மன்சுக் மாண்டவியா கூறினார்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து 220 கோடி தடுப்பூசிகளை வழங்கி சாதனை படைத்துள்ளதாகவும் அதில் தகுதியுள்ள மக்களில் 90 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார். மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதியானவர்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் முன்னெச்சரிக்கை டோஸ் பெற்றுள்ளனர் என்று கூறினார்.
மேலும், “தொழில்நுட்ப உதவி மட்டுமில்லாமல், தேசிய சுகாதாரப் பணி, மாநில பேரிடர் நிவாரண நிதி, அவசர கோவிட் மீட்பு தொகுப்பு மற்றும் பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் ஆகியவற்றின் மூலம் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்களுக்கு அரசாங்கம் உதவி செய்துள்ளது” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/covid-19-omicron-sub-variant-bf-7-mansukh-mandaviya-lok-sabha-563314/