திங்கள், 26 டிசம்பர், 2022

நேரு வாரிசு பேசுவது கோட்சேவின் வாரிசுகளுக்கு கசப்பாக இருக்கிறது – முதல்வர் ஸ்டாலின் விளாசல்

 25 12 2022

நேரு வாரிசு பேசுவது கோட்சேவின் வாரிசுகளுக்கு கசப்பாக இருக்கிறது – முதல்வர் ஸ்டாலின் விளாசல்

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ஆ. கோபண்ணா எழுதிய “மாமனிதர் நேரு” நூல் வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 25) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டார்.

அப்போது, “காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு நாட்டில் புயலை கிளப்பி வருகிறது. இது நாதுராம் கோட்சேவின் வாரிசுகளுக்கு கசப்பாக இருக்கிறது என ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், மாமனிதர் நேரு புத்தகத்தை வெளியிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். 2015-இல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது வரை வரவில்லை. இதை பார்க்கும்போது நேருவின் அருமை புரிகிறது” என்றார்.

தொடர்ந்து, “ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மூலம் இந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறார். ராகுல் காந்தி பேச்சு நேருவின் பேச்சு போல் உள்ளது. கோட்சேவின் வாரிசுகளுக்கு காந்தி, நேருவின் வாரிசுகள் பேச்சு எரிச்சலை உண்டாக்கத் தான் செய்யும்.

நாட்டிற்கு நேரு ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் இந்த புத்தகம் இருக்க வேண்டும்” என்றார்.

மேலும், நேரு காங்கிரஸின் குரலை மட்டுமல்ல, முழு நாட்டினதும் குரலையும் எதிரொலித்தார். அவர் ஒரு மொழி, ஒரு மதம், ஒரு இனம், ஒரே கலாச்சாரம் மற்றும் ஒரே பொதுச் சட்டத்தை எதிர்த்தவர். வகுப்புவாதமும் தேசியவாதமும் ஒன்றாக இருக்க முடியாது என்பதை தெளிவுபடுத்தினார்.

நேரு காங்கிரஸின் குரலை மட்டுமல்ல, முழு நாட்டினதும் குரலை எதிரொலித்தார். அவர் ஒரு மொழி, ஒரு மதம், ஒரு இனம், ஒரே கலாச்சாரம் மற்றும் ஒரு பொதுச் சட்டத்திற்கு எதிரானவர். வகுப்புவாதமும் தேசியவாதமும் ஒன்றாக இருக்க முடியாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். அதனால்தான் அவர் மதச்சார்பற்ற சக்திகளால் கொண்டாடப்படுகிறார்” என்று ஸ்டாலின் பேசினார்.

நீதிக்கட்சி அறிமுகப்படுத்தி வகுப்புவாத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு ஒப்புக்கொண்டு, திராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கைகளை நேரு காப்பாற்றினார். தமிழகம் விதைத்த விதையை மரமாக வளர்த்தார். இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படாது என்று உறுதியளித்தார். அதனால் தான் நேருவை கொண்டாடுகிறோம் என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து மேடையில் பேசிய ப.சிதம்பரம் எம்.பி கூறுகையில், இக்கால தலைமுறையினருக்கு நேருவின் வரலாறு தெரியாமல் உள்ளது. “மாமனிதர் நேரு” புத்தகம் அதை பூர்த்தி செய்யும் எனப் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அமைச்சர்கள் பொன்முடி, ஏ.வ.வேலு, சேகர் பாபு, வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி கே.சுப்பராயன், தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


source: https://tamil.indianexpress.com/tamilnadu/rahul-gandhis-speeches-taste-bitter-to-heirs-of-nathuram-godse-says-t-n-cm-stalin-564914/