12 3 23
தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வீடியோக்கள் பீகாரில் எடுக்கப்பட்டவை என பீகார் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. போலி வீடியோவைப் பகிர்ந்தது தொடர்பான வழக்கில், பீகார் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு, பிரபல யூடியூபரான மணீஷ் காஷ்யப் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் உள்ள பீகார் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான போலி வீடியோக்கள் தொழிலாளர்களிடம் பீதியை ஏற்படுத்தியது. தமிழக அரசு இதுதொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்து, வீடியோக்கள் போலியானவை என்று உறுதி செய்தது. இருப்பினும், இதுதொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட பீகார் அதிகாரிகள் குழு தமிழகம் வந்து அதன் அறிக்கையை முதல்வர் அலுவலகத்தில் மார்ச் 11ஆம் தேதி சமர்ப்பித்தது.
இந்தநிலையில், போலி வீடியோக்களை பரப்பிய வழக்கில் யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மணீஷ் காஷ்யப் மீது ஐ.டி சட்டம், 2000, பிரிவுகள் 153/153(a), 153(b), 505 (1) b, 505 (1) c, 468/471/120 (b) மற்றும் 67 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அமன் குமார், ராகேஷ் திவாரி மற்றும் யுவராஜ் சிங் ராஜ்புத் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மூளையாக செயல்பட்டவர் மணீஷ் காஷ்யப் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு தனி வழக்கில், தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளியின் மரணம் குறித்து வதந்திகளை பரப்பியதற்காக உமேஷ் மஹ்தோ என்ற இளைஞர் மார்ச் 11 அன்று கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர் சமூக வலைதளங்களில் ஒரு போலி வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.
“சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்கள் போலியானவை என்று பீகார் பொருளாதார குற்றப்பிரிவு கண்டறிந்தது, மேலும் பல பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 26 ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் கணக்குகளுடன் மொத்தம் 30 வீடியோக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. பத்து உறுப்பினர் கொண்ட குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. மணீஷ் காஷ்யப் மார்ச் 8 ஆம் தேதி ஒரு வீடியோவை ட்வீட் செய்தார், இது போலியானது மற்றும் ஆட்சேபனைக்குரியது. அந்த போலி வீடியோவைப் பதிவேற்றிய கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் ரஞ்சன் குமார், விசாரணையின்போது, பாட்னாவின் ஜக்கன்பூரில் உள்ள வாடகை வீட்டில் மார்ச் 6-ஆம் தேதி இந்த போலி வீடியோக்கள் படம்பிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்” என்று பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, மணீஷ் காஷ்யப் தனது புதிய ட்விட்டர் பக்கத்தில் கைவிலங்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, பீகார் காவல்துறையால் தான் கைது செய்யப்பட்டதாகக் கூறினார். ஆனால், அந்த புகைப்படம் போலியானது என்றும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இது பழைய புகைப்படம் என்றும், இது தொடர்பாக மற்றொரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் பீகார் போலீசார் தெரிவித்தனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, மணீஷ் காஷ்யப் மீது IPC இன் பிரிவுகள் 153 (b)/504/505 (1) (b)/505 (1) (c)/468/471/120 B மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் 66/66 (d)/74 இன் கீழ் புதிய எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதிலிருந்து, மணீஷ் காஷ்யப், ராகேஷ் திவாரி மற்றும் யுவராஜ் சிங் ராஜ்புத் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர், காவல்துறை அவர்களைத் தேடி வருகிறது.
முன்னதாக, 2019 ஆம் ஆண்டில், பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் மகாராணி ஜான்கி குன்வார் மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்பட்ட மன்னர் எட்வர்ட் VII சிலை சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக, மணீஷ் காஷ்யப் சமூக ஊடகங்களில் பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு தேசியவாதத்தின் பெயரால் சிலை சேதப்படுத்தப்பட்டதை ஆதரித்தார். அவர் மீது அப்போது போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணீஷ் காஷ்யப் என்கிற திரிபுராரி திவாரி. அவரது ‘சச் தக்’ என்ற யூடியூப் சேனலுக்கு லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர். இவர் சன்பாடியா சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். மணீஷ் காஷ்யப் 9,239 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தவர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/fake-video-alleging-bihar-migrant-workers-attack-in-tamilnadu-shot-in-patna-609983/