வெள்ளி, 22 மே, 2020

செலவினங்களை குறைக்க தமிழக அரசு முடிவு!

கொரோனா எதிரொலியால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது 
இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ள அரசாணையில், கொரோனா தடுப்பு, மற்றும் நிவாரண பணிகளால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களால், தமிழக அரசின் 2020-21 ஆம் ஆண்டு செலவின மதிப்பீட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் நடப்பு நிதியாண்டில் அதிகாரிகளின் பயண செலவு, அலுவலகங்களுக்கு கொள்முதல் செய்யும் பொருட்களில் 25% குறைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிதாக வாகனங்கள் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மற்றும் தீயணைப்புத்துறை போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு மட்டுமே தேவையான வாகனங்கள் வாங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு விளம்பரங்களில் ஆகும் செலவில் 25% குறைக்கப்படுகிறது. 
அதன்படி அரசு விழாக்களில் வழங்கப்படும் சால்வை, பூங்கொத்து, நினைவு பரிசுகள் வழங்குவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிகாரிகள் அரசு செலவில் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என்றும் அதிகாரிகளின் தினப்படி 25% குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.