முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் பேட்டியளித்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், அண்ணாசாலை, ஸ்பென்சர் அருகே, போக்குவரத்து போலீசாரின் வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாகனங்களில் முகக்கவசம் அணியால் வரும் பொதுமக்களுக்கு கவசங்களை காவல் ஆணையர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து கூடுதல் ஆணையர்கள் அருண், பிரேம் ஆனந்த் சின்ஹா கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், முகக்கவசம் அணியாமல் பொது மக்கள் வெளியே வரக் கூடாது அவ்வாறு வரும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். மேலும் சமூக தொற்று உருவாகாமல் இருக்க மருத்துவர்கள் பரிந்துரைத்த படி சுகாதார அறிவுரைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.
மேலும் பொது இடங்களுக்கு நடந்து வரும் பொது மக்கள் முக கவசம் அணியாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 100 ரூபாய் அபராதமும் வாகனங்களில் வருபவர்கள் முககவசம் அணியாமல் இருந்தால் அவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக ஆணையர் தெரிவித்தார்.