வெள்ளி, 22 மே, 2020

பொதுத் தேர்வு நடைபெறுவது குறித்த வழிமுறைகள் வெளியீடு!

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாமல், அதற்கு மாற்று தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 15ம் தேதி தொடங்கி, ஜூன் 25ம் தேதி வரை நடைபெறும் என்றும், 11ம் வகுப்பு தேர்வு ஜூன் 16ம் தேதியன்றும், 12ம் வகுப்புக்கு ஜூன் 18ம் தேதியும் நடைபெறும் என்று அட்டவணை வெளியிடப்பட்டது.
ஈரோட்டு மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனைக் கொண்டு அவர்கள் எளிதாக தேர்வு மையங்களுக்கு சென்றடைய முடியும் எனவும் தெரிவித்தார். மேலும் தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

➤கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வறையில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி. உரிய முறையில் சமூக இடைவெளி பின்பற்றிருக்க அறிவுறுத்தல்.
➤கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, மாணவர்கள் அவரவர் பயிலும் பள்ளிகளிலேயே தேர்வு மையம் அமைத்து தேர்வு எழுத நடவடிக்கை. இதனால் மாணவர்கள் பயணம் செய்வது தவிர்க்கப்படும். 
➤10ம் வகுப்பிற்கு, ஏற்கனவே 3,825 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு சேர்ந்து கூடுதலாக 8,865 தேர்வு மையங்களும் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மொத்தம் 12,690 தேர்வு மையங்கள் உள்ளன. இதில் 9.7 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 
➤11ம் வகுப்பு மாணவர்களின் வசதிக்காக கூடுதலாக 4,384 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, மொத்தமாக 7,400 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும். இதில் 8.41 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 
➤12ம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் போன 36,089 மாணவர்களுக்கு பழைய தேர்வு மையங்களிலேயே நடைபெறும். 
➤தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் மாணவர்களளுக்கு தேர்வு நடைபெறும் நாளன்று மட்டும் 46.37 லட்சம் முகக்கவசம் வழங்கப்படும். மேலும் தேர்வு மையங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். 
➤நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களுக்கு மாற்று தேர்வு மையம் அமைக்கப்படும். இந்த கட்டுப்பாட்டு மையங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் தனியாக அமைக்கப்படும்.  
➤வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் தனி அறையில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள். 
➤நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்கள் வெளியே வந்து செல்ல வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், சிறப்பு தேர்வு மையங்களுக்கு சென்று வர தனியாக போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தரப்படும்.  
➤தேர்வு மையங்களுக்கு சென்று வருவதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். 
➤வெளி மாநில அல்லது மாவட்டங்களில் இருக்கும் மாணவர்கள் தேர்வு எழுத சொந்த ஊருக்கு திரும்பும் பொருட்டு, TNepass இல்லாதபட்சத்தில், மாணவரின் அடையாள அட்டையை காண்பித்தால் போதுமானதாகும். தேர்வு நடைபெறும் நாட்களில் மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
➤அனைத்து மாணவர்களுக்கும் புதிதாக தேர்வு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்படும். மேலும் அந்தந்த பள்ளிகளில் சென்றும் பெற்றுக் கொள்ளலாம். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு வீடுகளுக்கு வந்தே கொடுக்கப்படும். அவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வர அனுமதியில்லை.  
➤விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகளுக்கு முன்பும், பின்பும் அறைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவும், உரிய முறையில் சானிடைசர்கள்  அறைகளில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது