வெள்ளி, 22 மே, 2020

ஒரு உண்மையான தேசபக்தரின் மகன் என்பதில் பெருமைப்படுகிறேன்! : ராகுல் காந்தி பெருமிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29 ஆம் ஆண்டு  நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது குறித்து அவரது மகன் ராகுல் காந்தி, ஒரு உண்மையான தேசபக்தரின் மகன் எனபதில் நான் பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 1984ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், நாட்டின் 6 வது பிரதமராக இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி பொறுப்பேற்றார். நாட்டில் முதல் இளம் வயது (40) பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். 
நாட்டுக்கு அயராது சேவையாற்றி வந்த ராஜீவ் காந்தி, 1991ம் ஆண்டு தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஆண்டுதோறும் அவரது நினைவு நாள் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி ராஜிவ் காந்தியின் 29 ஆவது நினைவு நாளான இன்று பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
இந்நிலையில் தனது தந்தையின் நினைவு தினத்தை குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு உண்மையான தேசபக்தர் மற்றும் நல்ல தந்தையின் மகன் என்பதில் நான் பெருமைகொள்கிறேன். ராஜீவ் காந்தி இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் சென்றார். நாட்டின் நலனுக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அவரின் நினைவு தினமான இன்று பாசத்துடனும் நன்றியுடனும் அவரை வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்