11 3 23
நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய விசாரணைக் கைதிகளை விடுவிக்க பரிந்துரைக்கும் அரசின் கோப்பு, ஆளுநரின் ஒப்புதலுக்காக விரைவில் அனுப்பப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொட்டிவாக்கத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி, மாநில துணைத் தலைவர் நவாஸ்கனி எம்.பி., தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம்.அப்துல் ரகுமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட கூட்டனி கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..
“ இஸ்லாமியர்களுக்கும் திமுகவிற்கும் இடையிலான உறவை யாராலும் பிரிக்க முடியாது. சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்மம் தான் நாட்டை காப்பாற்றுவதற்கான கருத்தியல்கள் ஒரே மொழி, ஒரே பண்பாடு என நாட்டை ஒற்றைத்தன்மையுடையதாக மாற்ற நினைப்பவர்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள். வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற நாம் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.
இந்த மாநாட்டில் சில கோரிக்கை தீர்மானங்கள் வைத்துள்ளீர்கள். இந்த தீர்மானங்களை முன்வைக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. அதை செய்து தரும் கடமை எனக்கும் உள்ளது. அதை மறக்கவும் மாட்டேன். மறுக்கவும் மாட்டேன்.
நீண்ட காலமாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதற்காக, தி.மு.க. ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரை அரசிடம் வழங்கப்பட்டு உள்ளது.
அதற்கான கோப்புகளை பார்த்தேன் நான் வாசித்து பார்த்தேன். விரைவில் அது கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய விசாரணைக் கைதிகளை விடுவிக்க பரிந்துரைக்கும் அரசின் கோப்பு விரைவில் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
– யாழன்
source https://news7tamil.live/islamic-life-prisoners-demand-release-will-be-forwarded-soon-for-governors-approval-chief-minister-m-k-stalin.html