11 3 23
நெய்வேலி என்எஸ்சி நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு விடுத்துள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதும் 7000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம், தற்போது 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கரிவெட்டி, கத்தாழை, வளையமாதேவி, வடக்கு வெள்ளூர், அம்மேரி, ஆதான்டார்கொள்ளை, மும்முடிசோழன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து என்எல்சி மற்றும் மாவட்ட நிர்வாகம், வேளாண்துறை அமைச்சர் உள்ளிட்டோரை கண்டித்து மக்களை ஏமாற்றாதே என்கிற போஸ்டர்களை கிராமங்கள் முழுவதும் ஒட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த போஸ்டர்களில் ஏக்கருக்கு 1 கோடி வழங்க வேண்டும், கல்வி தகுதிக்கேற்ப நிரந்திர வேலை வழங்க வேண்டும், தமிழக முதல்வர் அறிவித்த நிலைகுழு அமைக்காமல் வேளாண்துறை அமைச்சர் தனியாக நில உரிமையாளர்களை நிலத்தை கொடுக்க சொல்லி திணிப்பத்தை ஏற்க முடியாது என்ற வாசகம் அந்த போஸ்டரில் இடம்பெற்றிருந்தது.
மேலும் 2000ம் ஆண்டு முதல் கையகப்படுத்திய நிலத்திற்கு சமமான இழப்பீடு வழங்க வேண்டும், வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டத்தில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நெய்வேலி என்எஸ்சி நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்துவதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வளையமாதேவி பகுதியில் நேற்று முதல் சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அனைத்து வணிகர்களும் ஆதரவு தர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
இதனையொட்டி பாதுகாப்பு பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி.க்கள் பாண்டியன் (விழுப்புரம்), பகலவன் (காஞ்சிபுரம்), கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உள்பட 8 போலீஸ் காவல் கண்காணிப்பாளர்கள்,11 உதவி காவல் கண்காணிப்பாளர்கள், 21 துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
– யாழன்
source https://news7tamil.live/nlc-issue-full-blockade-today-in-cuddalore-7000-policemen-gathered.html