வியாழன், 1 நவம்பர், 2018

"உலகின் 90 % குழந்தைகள் மிக மோசமான நச்சுக் காற்றை சுவாசிக்கின்றன" - உலக சுகாதார நிறுவனம் November 1, 2018

Image

காற்று மாசுபாடே' தற்போது உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல் சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது. இது புகையிலை மூலம் புகைப்பவர்கள் உட்கொள்ளும் நச்சுத்தன்மையை விட கொடியது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த சிறப்பு செய்தியை தற்போது பார்ப்போம்.

ஒரு மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவையான சுத்தமான காற்று, குடிநீர், உணவு தான்  . உணவின் தரமும் ,குடிநீரின் தரமும் ஏற்கனவே இங்கே பல சீர்கேடுகளை ஏற்படுத்தியுள்ளதால் அதைஒட்டிய விவாதங்களையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவை இரண்டையும் விட மிக மோசமான ஆபத்து நச்சுக் காற்றால் விளைகிறது. 

குடிநீர், உணவில் கூட நம் தேர்வின் அடிப்படையில் அவற்றின் தரத்தை ஓரளவிற்கு சரி செய்துவிட முடியும். ஆனால் சுவாசிக்கும் காற்றை சுத்தமான காற்றாக தேடிப் போய் சுவாசிக்க முடியாது.  அதுவே காற்றின் மாசால் ஏற்படும் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்க காரணம்.  

உலகில் 10 ல் 9 பேர் நச்சுக் காற்றை சுவாசிப்பதால் பாதிக்கப்படுகிறார்கள் . கருவில் தோன்றி வளரும் போதே குழந்தைகள் நச்சுக்காற்றால் பாதிப்படைகின்றன. கருவுற்றிருக்கும் தாய் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் பிறக்கும் குழந்தை குறைவான எடையோடு, குறை பிரசவ குழந்தையாக பிறப்பது தொடங்கி நுரையீரல் தொற்று ,மூச்சுத் திணறல் என குழந்தைகள் வளர வளர நோயின் தாக்கங்களும் வளருகின்றன என்பதை உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள் உணர்த்துகின்றன. 

உலகின் 90 % குழந்தைகள் மிக மோசமான நச்சு காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்துள்ளது. நச்சுக்காற்றை சுவாசிக்கும் குழந்தைகளின் நுரையீரல் விரைவாக செயல்படும் திறனை இழப்பதோடு ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய்  பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இத்தகைய நோய் தாக்கங்கள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே தற்போது அதிகளவில் காணப்படுகின்றன. உலகில் 10ல் ஒரு குழந்தையின் இறப்பு நச்சுக்காற்றால் ஏற்படுவதாக  உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு சுட்டிக் காண்பித்துள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக  வட இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் காற்று மாசு ஏற்படுத்தியுள்ள தாக்கம் வெகு விரைவில் மற்ற மாநகரங்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது . தீபாவளி பண்டிகை காலங்களில்  காற்றின் மாசளவு இந்தியாவில் அதிகரிக்கும் . நுரையீரல் நோயை அதிகரிக்கும் மிக நுண்ணிய துகளான PM 2.5 டெல்லியில் தேசிய சராசரியை விட 16மடங்கு கடந்த ஆண்டு அதிகமாக இருந்தது.   சென்னையில் காற்று மாசு உலக சுகாதார நிறுவனத்தின் அளவுகோல்களை விட 5.2 மடங்கு அதிகமாக உள்ளது . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்குள்ளாகும் காற்றின் மாசிலிருந்து தற்காத்துக் கொள்ள சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் காற்றின் மாசை கட்டுப்படுத்துவது இன்றைய அளவில் அதிகவனம் செலுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது.  ஏனெனில்  ''காற்று மாசே'' தற்போது உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல் சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது. அதன் வீரியத்தின் அளவு புகையிலை பழக்கமுடையவரோடு ஒப்பீட்டால் கூடுதலாக உள்ளது .இதை தான் உலக சுகாதார நிறுவனம்  ''உலகை அச்சுறுத்தும் புதிய புகையிலை ''என்கிறது. 

Related Posts: