சனி, 13 மே, 2023

+2 தேர்வில் 499 மதிப்பெண்கள் எடுத்த தூய்மை பணியாளரின் மகள்; சாலையோரம் வசிக்கும் சாதனை மாணவியின் கதை

 

சென்னையில் தெருவோரத்தில் வசித்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை வென்ற அணியில் இடம்பிடித்த பள்ளி மாணவி, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். யார் அந்த சாதனை மாணவி?.. விரிவாக பார்க்கலாம்…

சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் தெருவோரத்தில் வசித்து வருபவர் தூய்மைப் பணியாளரான குட்டியம்மாள். இவரது மகள் மோனிஷா, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாதித்ததுடன், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதித்து காட்டியுள்ளார். இங்கிலாந்தில் 2019ம் ஆண்டில் நடைபெற்ற தெருவோர குழந்தைகளுக்கான கிரிக்கெட் போட்டியில் அந்த நாட்டு அணியை எதிர்கொண்ட தென்னிந்திய அணி உலக கோப்பையை வென்றது. இந்த அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளில் கவனிக்கத்தக்கவர் தான் இந்த மோனிஷா.

கருணாலயா என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் உலக கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்து சாதித்தபோதும் அரசின் கவனத்தை இவர் பெறவில்லை. அப்போதே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் Sam Curren மற்றும் Joe root ஆகியோர் மோனிஷாவை வீடியோ காலில் பாராட்டியபோதும், இந்திய வீரர்கள் ஆதரவு கிடைக்காததால், ஏமாற்றமடைந்தாலும் சற்றும் மனம் தளராத மோனிஷா, தொடர்ந்து கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டபடி, கடுமையாக முயற்சித்து படிப்பிலும் தற்போது சாதித்து காட்டியுள்ளார்.

நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து மோனிஷா அசத்தியுள்ளார். குறிப்பாக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த இவர், பொருளாதார பாடத்தில் 100க்கு 99 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தகர ஷீட் கொண்ட மிகச்சிறிய வீட்டில் தங்கி வறுமையில் வாடினாலும், அதிகாலை 5 மணிக்கு எழுந்து தினமும் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ள தவறாத மோனிஷா, பள்ளிக்கு சென்று படிப்பிலும் சிறந்து விளங்கி சாதித்து காட்டி, கிரிக்கெட்டை போலவே நிஜ வாழ்விலும் ஆல்ரவுண்டராக பரிணமிக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதுடன், அதிகாரமிக்க பொறுப்பில் அமர்ந்து, தெருவோரம் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றுவதே தனது குறிக்கோள் என கூறும் மோனிஷா, அங்கீகாரம் தந்த கிரிக்கெட்டை தொடரப்போவதாகவும் கூறுகிறார். தான் தங்குவதற்கு பாதுகாப்பான வீடு கொடுத்து உதவுவதுடன், தனது உயர்கல்விக்கு உதவிட வேண்டும் என்பது, அரசுக்கு அவர் முன்வைக்கும் கோரிக்கை.

உலகமே கைவிட்டாலும் உழைப்பு கைவிடாது என்ற கூற்றுக்கேற்ப, சாலையோர வீட்டில் வசித்தாலும், தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியால் சாதித்து காட்டியுள்ள இந்த மாணவியை ஊக்கப்படுத்தி, அங்கீகாரம் அளிக்கும்போதுதான் இவரை போன்ற பல மோனிஷாக்கள் உருவாக, சமூகத்தில் வாய்ப்பு ஏற்படும்.

இதுகுறித்த முழு வீடியோவைக் காண : 


source https://news7tamil.live/daughter-of-cleanliness-worker-who-scored-499-marks-in-2-exam-the-story-of-an-accomplished-student-who-lives-by-the-roadside.html

Related Posts: