25 5 23
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
ரூ.1200 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அதன் திறப்பு விழா வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், இந்திய அரசியலமைப்பின் 79-ம் பிரிவின் கீழ் நாடாளுமன்ற அவைகளை கூட்டுவதற்கும், ரத்து செய்வதற்கும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அமைச்சரவை மற்றும் பிரதமர் ஆகியோர் குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் வருவார்கள். எனவே குடியரசுத் தலைவர் தான் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெயசுகின் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் நாளை மறுநாள் முதல் உச்சநீதிமன்றத்தின் வார விடுமுறை நாட்கள் என்பதால், நாளை ஒரு நாள் மட்டும் தான் செயல்படும். எனவே இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
source https://news7tamil.live/the-president-should-inaugurate-the-new-parliament-building-petition-in-the-supreme-court.html