27 5 23
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஆனால், செந்தில் பாலாஜி இல்லங்களில் சோதனை ஏதும் நடைபெற வில்லை.
இந்நிலையில் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி சோதனை நடைபெறும் தகவலை அறிந்த அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகளை சோதனை செய்யவிடாமல் தடுத்து உள்ளனர். அவர்களின் கார் கண்ணாடியை சேதப்படுத்தினர். மேலும் அதிகாரிகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கரூர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் தி.மு.கவினர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அனுமதி இன்றி 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/case-filed-against-minister-senthil-balaji-supporters-679759/