புதன், 31 மே, 2023

பெண்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை” – முத்தமிழ்ச்செல்வி

 

30 5 23

பெண்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் தமிழ் பெண் முத்தமிழ்ச்செல்வி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் – மூர்த்தியம்மாள் என்ற தம்பதியின் மகள் முத்தமிழ்ச்செல்வி. இவர் திருமணமாக தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். 38 வயதான முத்தமிழ்ச்செல்வி, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இவருக்கு கடந்த மே 17-ம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது பயணத்தின் 51வது நாளான கடந்த 23-ம் தேதி ஏறத்தாழ 8,849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து முத்தமிழ்ச்செல்வி சாதனை படைத்தார். அதனைத் தொடர்ந்து, இன்று சென்னை விமான நிலையம் வந்துள்ள இவருக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து, இனிப்பு வழங்கி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முத்தமிழ்ச்செல்வி கூறியதாவது:

”நான் எவரெஸ்ட் ஏற வேண்டும் என்று மூன்று ஆண்டுகாலமாக யோசித்து வந்தேன். அன்றிலிருந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தேன். எனக்கு உதவி செய்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என் பயிற்சியாளர் திருலோக சந்தர் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

தமிழ்நாட்டில் நிறைய பெண்கள் உள்ளார்கள், அவர்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு ஏற்றவாறு இதனை சாதித்து உள்ளேன். எவரெஸ்ட்டில் 6 சிலிண்டர்கள் தான் கொடுப்பார்கள், ஒரு நிமிடம் கூட மிக முக்கியம். அதற்குள் சிலிண்டரின் உதவியை பயன்படுத்தி செயல்பட வேண்டும். எனக்கு ஆக்சிஜன் பிரச்னை வந்த போது மெக்சிகன் ஒருவர் தான் உதவினார். அதனால் தான் உயிர் பிழைத்தேன்.

அங்கு சென்று வர மற்றவர்களுக்கு 36 மணி நேரம் பொதுவாக எடுத்துக் கொள்ளும். எனக்கு 48 மணி நேரம் ஆனது. என் குழுவில் முதலில் இருந்து இறுதி வரை நடந்து சென்றது நான் தான். மொத்தம் 56 நாட்கள் பயணம் செய்துள்ளேன். ஏழு கண்டங்களில் இருக்கும் உயரமான சிகரங்களை ஏற வேண்டும் என்பது தான் என் இலக்கு. ஏற்கனவே ஒன்று முடித்துவிட்டேன். அடுத்துள்ள 6 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை ஏற வேண்டும் என்பதே இலக்கு.

மலை ஏறி இறங்கும் போது, என்னுடன் வந்தவர்கள் பலர் ஹெலிகாப்டர் மூலம் சென்றுவிட்டனர். ஆனால், என்னிடம் பணம் இல்லாததால் சிரமம்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்க தொடர்பு கொண்ட போது, எனது உடல்நிலையை புரிந்து, உடனடியாக ஹெலிகாப்டர் உதவியை வழங்கினார். அதனால் தான் விரைவில் சென்னை வர முடிந்தது.”

இவ்வாறு முத்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/nothing-is-impossible-for-women-if-they-try-muthamilchelvi.html