திங்கள், 22 மே, 2023

ரூ.2000 நோட்டு அரசு பேருந்துகளில் வாங்கப்படாது; ஆம்னி பஸ்களில் வாங்கப்படும் – உரிமையாளர்கள் அறிவிப்பு

 21 05 2023 

அரசுப் பேருந்துகளில் பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் 2000 நோட்டுகள் வாங்கப்படும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 2016 முதல் புழக்கத்தில் இருந்து வரும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில் திருநெல்வேலி போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே 23ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் 2000 ரூபாய் நோட்டை வாங்க வேண்டாம் என நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியின் நிபந்தனையால் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால், பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பக்குவமாக எடுத்துரைத்து 2000 ரூபாய் நோட்டுகளை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.

இந்நிலையில் டிக்கெட் விற்பனையின் போது ஆம்னி பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை பயணிகளிடம் வாங்கிக் கொள்ளப்படும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tnstc-trirunelveli-branch-order-to-avoid-2000-currency-note-from-passengers-674940/