28 5 23

நாடாளுமன்ற புதிய கட்டடம் இன்று திறக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது” எனக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன.
அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள்.
இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் – தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது.
குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா? எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-condemned-the-arrest-of-female-wrestlers-681044/