புதன், 31 மே, 2023

மாநில சுயாட்சி முழக்கம்.. ஒருங்கிணையும் கட்சிகள்… கரம் கோர்க்கும் தலைவர்கள்

 

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கிற தமிழ்நாட்டின், திமுகவின் முழக்கம், இப்போது தேசிய அளவிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது… பீகாரில் ஒன்று கூடும் எதிர்க்கட்சிகள்…இரண்டுக்கும் என்ன தொடர்பு. விரிவாக பார்க்கலாம்.

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் பொதுத் தேர்தலிலும் வென்று, மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்று பாஜகவும், பாஜக ஆட்சி அமைப்பதை தடுத்தே ஆக வேண்டும் என்கிற நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் உள்ளன. பத்தாண்டுகளாக பவரில் இருக்கும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். மூன்றாவது அணி பெயிலியர் மாடல் என்றும் தலைவர்களால் பேசப்பட்டும் வருகிறது.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இதே போல் தேசிய அளவிலும் மெகா கூட்டணி அமைக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் இருவரும் முனைப்பு காட்டி வருகின்றனர். ஒவ்வொரு மாநிலமாக சென்று, பாஜகவிற்கு எதிராகவும் மாநிலத்தில் செல்வாக்காகவும் உள்ள கட்சிகளின் தலைவர்களை, முதல்வர்களை சந்தித்தும் வருகின்றனர். குறிப்பாக மூன்றாவது அணி என்று அமைந்தால், அது ஆளும் பாஜகவிற்கே சாதகமாக அமையும் என்று அழுத்திச் சொல்லி, பொது எதிரியை வீழ்த்த ஒருங்கிணைவோம் வாரும் என்று பேசப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

பொது வேட்பாளர்கள்

இதனால், மூன்றாவது அணி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோரையும் சந்தித்துள்ளனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் ’’பொது செயல் திட்டம்’’, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவின், ’’மாநிலக் கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் மாநிலக் கட்சிகளுக்கு முன்னுரிமை’’ முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ‘’ பாஜகவை வீழ்த்த 450 இடங்களில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர்’’ ஆகிய கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. ஆனாலும் சந்திரசேகர் ராவ், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, மாயாவதி. அகிலேஷ் உள்ளிட்டோர் இன்னும் பிடி கொடுக்கவில்லை. அவர்களிடமும் தொடர்ந்து பேசப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அண்மையில் நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா புறக்கணிப்பில் 19 கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டு, ஒருங்கிணைந்துள்ளன. பி.ஆர்.எஸ் கூட்டறிக்கையில் கையெழுத்திடவில்லை என்றாலும் 19 கட்சிகளின் முடிவையே அக்கட்சியும் எடுத்தது. இதுவே எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு அச்சாரமாகவும் அமையும் என்கிறார்கள்.

ஒருங்கிணையும் தலைவர்கள்

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியின் அடுத்த கட்டமாக பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 12-ந் தேதி அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டத்தை நிதிஷ்குமார் கூட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன கார்கே, ராகுல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அல்லது பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

மாநில சுயாட்சி/அதிகாரம்

தமிழ்நாடு, கேரளா, மே.வங்கம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட பாஜக அல்லாத முதலமைச்சர்கள் உள்ள மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஆட்சி நிர்வாகத்தில் இடையூறு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் மிரட்டல் சோதனைகள் நடத்தப்படுவதாக தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து முற்றிலும் மத்தியில் அதிகாரத்தை குவிக்க முயற்சிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இதனால், மாநிலங்களுக்கு அதிகாரம், மாநில சுயாட்சி என்கிற அடிப்படையில் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கவும் அதற்கான அறிவிப்பை இந்த கூட்டத்தில் தலைவர்கள் வெளியிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னோட்டமாக முதலமைச்சர்களாக உள்ள, மம்தா, சந்திரசேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரது பேச்சுக்களைக் குறிப்பிடுகிறார்கள். நிதி ஆயோக் கூட்டட்திற்கு செல்லாத, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ’’கூட்டாட்சி கேள்விக்குள்ளாகியுள்ளதாக’’ பிரதமருக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக் காட்டுகிறார்கள். பாஜகவை வீழ்த்த எந்த தியாகத்திற்கும் தயார் என்று சொல்லியுள்ள காங்கிரஸ் கட்சியும் இதற்கு இசைவு தெரிவித்துள்ளதாகம் கூறப்படுகிறது.

அண்ணா – ஸ்டாலின்: தொடரும் முழக்கம்

’’திராவிட நாடு கோரிக்கையை கைவிடுகிறோம். அந்த கோரிக்கைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அதை கைவிடவில்லை’’ என்று சொன்ன பேரறிஞர் அண்ணா தொடங்கி தற்போதைய மு.க.ஸ்டாலின் வரை மாநில சுயாட்சி என்கிற உரிமைக் குரலை தொடர்ந்து முன் வைக்கின்றனர். மாநிலங்களுக்கு அதிகாரப் பரவல் வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு மேல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் தேசிய அளவிலும் வெளிப்பட்டு வருகிறது. இதுவே கட்சிகளையும் ஒருங்கிணைத்துள்ளது என்கிறார்கள்.

மாநில சுயாட்சி ஏன் வேண்டும் ?

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியா ஒரு கூட்டாட்சி (Federalism) நாடாகும். பல மாநிலங்களின் ஒன்றியம் (Union of states)  ஆகையால்தான் இந்தியாவை ஒரு துணைக் கண்டம் என்கிறார்கள். இந்திய துணைக் கண்டத்தில் உள்ள ஒவ்வொரு மாநில மக்களும் தனித்த தேசிய இனங்களாக, தங்களுக்கென தனியாக மொழி, பண்பாடு, கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர். இந்தியாவில் மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியல், மத்திய அரசின் அதிகாரப் பட்டியல், இரண்டுக்கும் பொதுவான பட்டியல் (Concurrent list) என்று 3 வகையாக அரசமைப்பின் 7வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லை, பாதுகாப்பு, ராணுவம், நிதி, வெளியுறவு, அணுசக்தி, வான், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட 100 துறைகள் மத்திய அரசிடம் உள்ளன. இத்துறைகளில் மத்திய அரசு மட்டுமே முடிவுகள் எடுக்க முடியும். தேவையான சட்டங்களை இயற்றலாம்.

காவல்துறை, மருத்துவம், உள்ளாட்சி, மது விற்பனை உள்ளிட்ட 61 துறைகள் மாநில அரசுப் பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம். தேவையான சட்டங்களை இயற்றலாம். கல்வி, விளையாட்டு, வனம் உள்ளிட்ட 66 துறைகள் இருந்தன. கடந்த 1976ல் நெருக்கடி நிலை காலத்தில் கல்வி உள்ளிட்ட 5 துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. வனம், மின்சாரம், தொழில் உள்ளிட்ட 52 துறைகள் பொதுப்பட்டியலில் உள்ளன. இத்துறைகள் குறித்து இருமாநில அரசுகளும் சேர்ந்து முடிவு செய்யலாம். சட்டம் இயற்றலாம்.

’’ஜனநாயகத்தின் அடிப்படையான அதிகாரப் பகிர்வு என்பது நடைமுறையில் இல்லாமல், மத்திய அரசிடமே அதிகாரங்கள் குவிந்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாகவே இருந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் அவர்களின் இசைவு பெற்றே செயல்பட வேண்டியுள்ளது. இது முழுமையான கூட்டாட்சி அல்ல. கூட்டாட்சி போன்றது (Quasi federal) ’’ என K.C.வியார் உள்ளிட்டோர் சொல்கிறார்கள்.

கட்டுப்படுத்தப்படும் மாநிலங்கள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இருந்தாலும் மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டாலும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஒப்புதலின்றி எந்த சட்டமும் நடைமுறைக்கு வராது. ஆகையால்தால் மாநில சுயாட்சி முழக்கத்தை பேரறிஞர் அண்ணா முன் வைத்தார். அவர் தொடங்கிய திமுக, அவர் பெயரால் தொடங்கப்பட்ட அதிமுக இரண்டு இயக்கங்களும் இந்த புள்ளியில் இணைகின்றன.

அண்ணாவிற்கு பிறகு முதலமைச்சராகிய மு.கருணாநிதி, மாநில சுயாட்சி மாநாட்டை நடத்தினார். மாநில சுயாட்சி குறித்து நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையிலான குழு 1971ம் ஆண்டு மே 27ம் தேதி 380 பக்க பரிந்துரையை அறிக்கையாக கொடுத்தது. இதில், அரசமைப்புச் சட்டத்தில் 7வது அட்டவணையில் உள்ள அதிகாரங்களை திருத்தம் செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு சட்டமியற்றும் அதிகாரம் வேண்டும். மாநில அரசுகளிடம் கலந்தாலோசனை செய்த பிறகே ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.

கோரிக்கை விடுத்த பிற தலைவர்கள்

ஆந்திராவின் என்.டி.ராமராவ், கர்நாடகத்தின் ராமகிருஷ்ண ஹெக்டே, மேற்கு வங்கத்தின் ஜோதிபாசு, காஸ்மீரின் பரூக் அப்துல்லா, அசாம், கேரளம் என பிற மாநிலங்களும் அவற்றின் முதலமைச்சர்களாக இருந்தவர்களும் மாநில உரிமைகள் குறித்து அவ்வப்போது பதிவு செய்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களுக்கான அதிகாரப் பரவலை வலியுறுத்தியுள்ளது.

மாநில சுயாட்சி குரல் என்பது தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று சொல்வதை அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் மறுத்துள்ளனர். அப்போது சீனா போரின் போதும் அதற்கு பிறகு பாகிஸ்தான் உடனான போரின் போது அதிக அளவில் நிவாரண உதவி அளித்த மாநிலமாக தமிழ்நாடு இருந்துள்ளது. ஆகையால், மாநில சுயாட்சி, மாநிலங்களுக்கான அதிகாரத்தின் மூலம் மாநிலங்கள் வளர்ச்சி பெறும். மாநிலங்களின் வளர்சியுடன் நாடு வளர்ச்சி பெறும் என்கிறார்கள்.

கிடைக்குமா மாநில சுயாட்சி…? பார்க்கலாம்.


source https://news7tamil.live/the-slogan-of-state-autonomy-parties-converging-leaders-asking-for-hands.html