29 5 23
தேசிய தலைநகரில் புதிய பார்லிமென்ட் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து 2 கிமீ தொலைவில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் புதிய நாடாளுமன்றம் நோக்கி சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு அன்றைய தினம் ஒரு பெண்கள் மகாபஞ்சாயத் திட்டமிடப்பட்டது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை ஜந்தர் மந்தரில் குழப்பம் நிலவியது. எதிர்ப்பாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான WFI தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக அரசாங்கத்தின் செயலற்ற தன்மைக்கு எதிராக இந்திய மல்யுத்த வீரர்கள் ஏப்ரல் 2023 முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கண்டனங்கள் எழுந்துள்ளன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “இந்தியாவின் பெயரை உயரத்திற்கு கொண்டு செல்லும் நமது விளையாட்டு வீரர்களிடம் இதுபோன்ற நடத்தை மிகவும் தவறானது மற்றும் கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “புதிய நாடாளுமன்ற திறப்பை காரணம் காட்டி, முடிசூட்டும் விழா நடந்துவிட்டது. திமிர் பிடித்த மன்னன் மக்களின் குரலை நசுக்குகிரான்” என்றார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “பாஜக அரசின் ஆணவம் அதிகமாகிவிட்டதால், நமது பெண் வீராங்கனைகளின் குரலை அரசாங்கம் இரக்கமில்லாமல் மிதித்து வருகிறது. வீரர்களின் மார்பில் இருக்கும் பதக்கங்கள் நம் நாட்டின் பெருமை” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஜனநாயகம் என்பது கட்டிடங்கள் மட்டுமல்ல, பொதுமக்களின் குரலால் இயங்குவது” எனத் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, “மோடி அரசாங்கம் இன்று ஒரு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்திருக்கலாம். ஆனால் தெருக்களில், அதன் காவல்துறை ஜனநாயகத்தைப் பற்றி உண்மையில் என்ன நினைக்கிறது என்பதைக் காட்டியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல் அமைச்சருமான மம்தா பானர்ஜி, “ஜனநாயகம் சகிப்புத்தன்மையில் உள்ளது, ஆனால் எதேச்சதிகார சக்திகள் சகிப்புத்தன்மையின்மை மற்றும் கருத்து வேறுபாடுகளை அடக்குவதன் மூலம் வளர்கின்றன. அவர்களை காவல்துறை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரும், தி.மு. கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின், செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/arrogant-king-crushing-voice-of-public-on-streets-opposition-leaders-slam-delhi-police-action-against-wrestlers-681080/