28 5 23
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர், வீராங்கனைகள், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது டெல்லி காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக வரும் மே 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் போது, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல மல்யுத்த வீரர், வீராங்கனைகள் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை கடந்த 26 ஆம் தேதி வெளியிட்டனர். மேலும், நாடாளுமன்றம் முன்பு கூட்டம் நடத்தவும் முடிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற கட்டடம் உள்ளிட்ட டெல்லியின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
அதன்படி இன்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற்ற நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி இந்திய முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தலைமையில், இன்று காலை ஜன்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்கினர். போலீசாரின் தடுப்புகளை தாண்டி பேரணியை தொடர முயன்ற போது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட, வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்து தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செற்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
இதனை தொடர்ந்து, முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் இந்த கைது நடவடிக்கைக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முடி சூட்டு விழா முடிந்தது. மக்களின் குரல்களை நசுக்கும் ஆணவமிக்க மன்னரின் பணி தொடங்கியது என கூறி டெல்லியில் மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்ட வீடியோவை பதிவிட்டு தனது கண்டனத்தை ராகுல் காந்தி பதிவு செய்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா
source https://news7tamil.live/arrest-of-wrestlers-who-marched-towards-parliament-rahul-gandhi-condemns.html