செவ்வாய், 23 மே, 2023

வரலாறு காணாத நெருக்கடியில் நூற்பாலைகள்: உற்பத்தியை 50 சதவீதமாக குறைப்பதாக அறிவிப்பு

 

22 5 23

Spinning mills in Coimbatore plan to reduce production by 50 percent
கோவையில் நூற்பாலைகள் உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளன.

சிறுகுறு நுற்பாலைகள் கூட்டமைப்பு திங்கள்கிழமை (மே 22) பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது கூட்டமைப்பின் செயலாளர் ஜெகதீஷ் கூறுகையில், “நாட்டிலுள்ள தொழில் துறைகளில், குறைந்த முதலீட்டில் அதிக வேலைவாய்ப்பை தருவது ஜவுளித்தொழில் துறை என்றால் அது மிகையல்ல.

படித்த பட்டதாரிகளில் ஆரம்பித்து பாமரன் கூலி தொழிலாளி வரை அனைத்து வர்கத்தையும் அரவணைக்கும் தொழில் ஜவுளி தொழில். அப்படிப்பட்ட தொழிலை அரவணைக்க அரசாங்கங்கள் தவறிவிட்டதா என்ற கேள்வி எழுப்பும் வகையில் ஜவுளித்துறை கடும் தொழில் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.

அதில் முதன்மையான இடம் வகிப்பது ஜவுளித்தொழினின் தாய் தொழிலான நூற்பாலைகள். நாட்டில் இயங்குகின்ற நூற்பாலைகளில் 50% நூற்பாலைகள் தமிழ்நாட்டில் இயங்குகின்றன.
பருத்தியிலிருந்து நூல் தயாரிக்கும் நூற்பாலைகள் கழிவு பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கும் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள், ரீசைக்கில் மில்கள் என 2,000″க்கும் மேற்பட்ட மில்கள் இயங்கி வருகின்றன.

இந்த நூற்பாலைகள் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 15 லட்சம் குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன. இந்த நிலையில் ஜவுளித்தொழிலில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருப்பதனால்

லட்சக்கணக்கான குடும்பங்கள் மற்றும் ஜவுளி நூற்பாலைகளின் எதிர்காலம் என்னவாகும் என கேள்விக்குள்ளாக்கப்பட்டு இருக்கின்றன.

உலக அசாதாரண பொருளாதார சூழ்நிலையால் வெளிநாடு இறக்குமதியால் நூற்பாலைகள் நட்டத்தில் இயங்குவதாக தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக உற்பத்தி செய்யப்படும் நூல்களை கிலோவுக்கு 20 முதல் 25 ரூபாய் வரை நட்டத்திற்கு விற்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

வருடத்தில் 365 நாட்களும் மூன்று ஷிப்ட் என்ற அடிப்படையில் இயங்கி வந்த நூற்பாலைகள் தற்போது 50 சதவீதத்திற்கும் குறைவான வேலை வாய்ப்பினை தந்த வருகின்றன.

பங்களாதேஷ், வியட்நாம், சீனா போன்ற போட்டி நாடுகள் நூல்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில், தற்போது உள்நாட்டிலேயே அவர்கள் உற்பத்தி செய்து அங்குள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு வர்த்தகம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி இது போன்ற நாடுகளுக்கு கணிசமாக குறைந்திருக்கும் நிலையில், போட்டி நாடுகள் தற்போது இறக்குமதியிலும் கால் பதிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். இதனால் உள்நாட்டு நூல் உற்பத்தி போதுமான வர்த்தகம் இன்றி தவிக்கின்றது.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற நூல்களின் விலை இந்தியாவில் கிடைக்கின்ற சந்தை விலை குறைவாக இருப்பதனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற நூல்கள் விற்பனை மந்தமாகியிருக்கின்றன. இதனால் உற்பத்தி செய்யப்படுகின்ற நூல்களை நட்டத்தில் விற்கின்றனர்.

இந்த நிலையில் நூற்பாலைகள் சங்கத்தினர் சந்திக்கும் சவால்களை அடுக்கி அதற்கான தீர்வை எதிர்நோக்கியிருக்கின்றனர். கடந்த கொரோனா பேரிடரின் பொழுது நெருக்கடியில் இருந்த தொழில் முனைவோருக்கு ஒன்றிய அசராங்கத்தின் முன்னெடுப்பில் வங்கிகள் தந்த கடன்களை தற்பொழுது வட்டியுடன் செலுத்தி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதனால், கொரோனா பேரிடர் காலத்தில் பெற்ற கடனை திருப்பி செலுத்த 6 மாதத்திற்கு அவகாசம் கோருகின்றனர். நூற்பாலைகளுக்கான கடன் வட்டி சதவிகிதம் 7ல் இருந்து 11 ஆக உயர்ந்த நிலையில், மீண்டும் 7% ஆக குறைக்க நூற்பாலை தொழில் முனைவோர் ஒன்றிய அமைச்சகங்களுக்கு நூற்பாலை சங்கத்தினர் கோரி இருக்கின்றனர்.

இதேபோன்று தமிழ்நாடு அரசாங்கமும் உயர்த்திய மின் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெறவும் வலியுறுத்தி இருக்கின்றனர். பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நூற்பாலைகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தொழிலை மீட்க வேண்டும் என நூற்பாலை சங்கத்தினர் கோருகின்றனர்.

இந்த நிலையில் நட்டத்தில் இயங்குகின்ற நூற்பாலைகள் 50 % உற்பத்தியை குறைக்க முடிவெடுத்து அறிவித்தனர் . இதனால் நாள்தோறும் 150 முதல் 200 கோடி வர்த்தகம் பாதிக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றன.

எனவே வர்த்தகம் , தொழிலாளர் வாழ்வாதாரம், நூற்பாலைகள் தொழில் நட்டத்தினை கருதி உடனடியாக ஒன்றிய மாநில அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

source https://tamil.indianexpress.com/tamilnadu/spinning-mills-in-coimbatore-plan-to-reduce-production-by-50-percent-675910/