28 5 23
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் மெய்டீஸ் பிரிவைச் சேர்ந்த பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.
மெய்டீஸ் பிரிவினரின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் மணிப்பூரின் உக்ருல், கங்க்பொக்பி, சந்தேல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடைபெற்றது.
மாணவர்கள் அமைப்பினரின் இந்த பேரணிக்கு பழங்குடி அல்லாத பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு முற்றி மோதலாக மாறியது. இந்த மோதல் மணிப்பூர் மாநிலம் முழுவதும் பரவியது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மலையோர மாவட்டங்களில் வீடுகள், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன.
கடந்த 3-ம் தேதி ஏற்பட்ட இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, ராணுவ வீரர்கள் பதற்றமான சூழலை கட்டுப்படுத்தினர். மேலும், கூடுதல் பாதுகாப்பிற்காக மணிப்பூரில் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மணிப்பூரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும், ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில், 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் கூறியுள்ளார்.
source https://news7tamil.live/security-forces-attack-in-manipur-30-terrorists-shot-dead.html