திங்கள், 29 மே, 2023

செங்கோலை வைத்து அரசியல் நாடகம் ஆடி வருகிறது; புதுவையில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

 29 5 23

CPM GR
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் புதுச்சேரியில் பேட்டி அளித்தப்போது

நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழா ஜனநாயகத்திற்கு எதிராக நடைபெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் இன்று குற்றஞ்சாட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா ஜனநாயகத்திற்கு எதிராக நடைபெறுவதால், விழாவில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று அறிவித்தது. அது மட்டும் இல்லாமல் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவுடன் சேர்த்து 7 வது குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சாவர்க்கரின் பிறந்த நாளில் திறப்பது உள்நோக்கம் கொண்டது.

தமிழகத்தின் அடையாளம் என்று கூறி செங்கோலை வைத்து பா.ஜ.க அரசியல் நாடகம் ஆடி வருகிறது. சுதந்திரத்திற்கும், அதிகார பரிமாற்றத்திற்கும் இது சம்பந்தமில்லாதது.

புதுச்சேரியில் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் கடந்த ஆண்டைவிட அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இதற்கு புதுச்சேரி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவுக்கு ஆசிரியர் பற்றாக்குறை, பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாததே தேர்ச்சி விகிதம் குறைவுக்கு காரணம். இதற்கு பா.ஜ.க, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.

மார்ச் மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற கூட்ட தொடரில் ரேஷன் கடைகளை திறப்போம். பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம், சமையல் எரிவாயுக்கு மானியம் வழங்கப்படும் என்றெல்லாம் அறிவிப்புகளை என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்புகள் அறிவிப்புகளாகவே தற்போது வரை உள்ளது.

டெல்டா மாவட்டமான காரைக்காலில் விவசாயிகளிடமிருந்து சம்பா நெற் பயிர்களை கொள்முதல் செய்ய எந்தவித வழியையும் புதுச்சேரி அரசு ஏற்படுத்தவில்லை. அண்டை மாநிலமான தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏன் காரைக்காலில் மட்டும் கொள்முதல்  நிலையங்களை புதுச்சேரி அரசு ஏன் அமைத்து தரவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய மருத்துவ கவுன்சில், புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு அனுமதி மறுத்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இது தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஊக்குவிக்கும் செயல். அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏழை எளிய மாணவர்கள் அதை சார்ந்து உள்ளனர். அரசு கல்லூரிகளில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் அதனை சரிசெய்து இந்தாண்டே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

இச்செய்தியாளர் சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் மற்றும் சுதா சுந்தரராமன், பெருமாள், ராமச்சந்திரன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி


source https://tamil.indianexpress.com/tamilnadu/cpm-g-ramakrishnan-slams-puducherry-nr-congress-bjp-govt-681031/