புதன், 31 மே, 2023

திடீர் ஸ்டிரைக் எதிரொலி: போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் இன்று அரசு பேச்சுவார்த்தை

 31 5 23

tamil nadu government bus

தமிழ்நாடு அரசு பேருந்துகளுக்கு தனியார் மூலம் ஓட்டுநர்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று தொழிற்சங்கங்களுடன் அதிகாரிகள் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

சென்னையில் MTC எனப்படும் மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் 1,559 சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 1,304 சொகுசு பேருந்துகள் மற்றும் ஏசி பேருந்துகளும் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் உலக வங்கியிடம் நிதி உதவி பெற்று இந்த ஆண்டு 1000 மின்சார பேருந்துகளை வாங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்திருக்கிறது.

அதே சமயம் இந்த புதிய பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவதற்கு, அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் காரணமாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் போக்குவரத்து துறையில் ஊழியர்களை நியமிக்க அரசு பேருந்து கழகம் முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியானது.

இதனை அறிந்து ஆத்திரமடைந்த சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதன் காரணமாக சென்னையில் பேருந்து பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் முன் அறிவிப்பு இன்றி பேருந்து ஓட்டுநர்கள் தன்னிச்சையாக நடத்திய இந்த போராட்டத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டார்கள். இதனை தொடர்ந்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை ஏற்று ஓட்டுநர்கள் மீண்டும் பேருந்துகளை இயக்க தொடங்கியதால் போக்குவரத்து சீரானது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-mtc-bus-drivers-protest-transport-department-officials-discussion-683303/