செவ்வாய், 30 மே, 2023

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது – அறங்காவலர் பாபு விளக்கம்

 

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது என உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பாலு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் ரூ.34.7 லட்சம் தொகையை முடக்கியிருப்பதாக அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு அந்த அறக்கட்டளையின் அறங்காவலர் பாபு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை 2012 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட நாள் முதல் கல்வி, மருத்துவ உதவிகள், தானியங்கி கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரம், குழந்தைகள், மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள், அவசர ஊர்தி சேவை, நடமாடும் நூலகம், மக்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பூங்காக்கள் புதுப்பித்தல் போன்ற பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்து வருகிறது.

அறக்கட்டளை பெற்றுள்ள நன்கொடைகளின் விபரங்களையும் அறக்கட்டளையின் வாயிலாக நாங்கள் செய்துள்ள நலப்பணிகளுக்கான வரவு செலவு கணக்குகளையும் முறையாக வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்து வருகின்றோம்.

அமலாக்கத்துறையில் ட்விட்டர் பக்கத்தில் 27 ஆம் தேதி அன்று வெளிவந்த பதிவு ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரிக்கப்படுகிறது. ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளை போல் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது.

அமலாக்கத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் 36.3 கோடி மதிப்பிலான சொத்து முடக்கத்திற்கும் எங்கள் அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்பொழுது அமலாக்கத்துறை முடக்கிய ரூ. 34.7 லட்சத்திற்கான தகுந்த ஆவணங்களை கொடுத்து அதனை சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை முழுக்க முழுக்க மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு களப்பணியாற்றுகிறது. உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை என்றும் அறத்தின் வழி மட்டுமே நடக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா


source https://news7tamil.live/udhayanidhi-stalin-trust-does-not-have-any-immovable-property-explanation-by-trustee-babu.html