திங்கள், 22 மே, 2023

டிஜிட்டல் துறைகளில் இந்தியா உச்சம் தொட அன்றே அடித்தளமிட்ட ராஜீவ் காந்தி..!!!

 21 5 2023

நவீன அறிவியல் தொழில் நுட்பம், கணினி உள்ளிட்ட சேவைத்துறை, டிஜிட்டல் துறைகளில் நாடு உச்சம் தொட, அன்றே அடித்தளமிட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம். அவரைப்பற்றிய ஒரு செய்தி தொகுப்பை காணலாம்.

ஐந்தாண்டு திட்டங்கள் மூலம், இந்தியாவை கட்டமைத்தவர் முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர் லால் நேரு. நேருவின் மகள் இந்திரா காந்தி – பெரோஷ் காந்தி தம்பதிக்கு 1944 ஆம் ஆண்டு மும்பையில் மூத்த ,மகனாக பிறந்தார் ராஜீவ் காந்தி. இவரின் தம்பியின் பெயர் சஞ்சய் காந்தி.

சிறுவயதிலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட ராஜீவ், பள்ளிக்கல்வியை மும்பை ,டேராடூன் பிறகு சுவிட்சர்லாந்திலும் படித்தார். பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து, தாயகம் திரும்பிய ராஜீவ் காந்தி இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்தார்.

இதன் பின்னர் 1968 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டைச்  சேர்ந்த சோனியாவை மணந்தார். பிரதமராக இருந்த  இந்திரா காந்தியிடம் , இன்ஜினியரிங், நவீன தொழில் நுட்ப வளர்ச்சி குறித்தும், அதே போல இந்தியாவிலும் வளர வேண்டும் என குறிப்பிடுவார் ராஜீவ் காந்தி. இந்திரா காந்தியிடம் அரசியலே வேண்டாம், நான் குடும்ப தலைவன் எனச் சொல்வார் ராஜீவ்

1981 ஆம் ஆண்டு விமான விபத்தில் சஞ்சய் காந்தி மரணித்த பின், தனிப்பட்ட லட்சியங்களை தியாகம் செய்தார் ராஜீவ். தாயின் கட்டளையை ஏற்று அமேதி தொகுதி எம்.பி யாகவும் ,காங்கிரசில் பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றார். பஞ்சாப் மாநிலத்தை பிரித்து, காலிஸ்தான் தனி நாடு கேட்ட சீக்கிய தீவிரவாதிகளை ஆபரேசன் ப்ளு ஸ்டார் மூலம் ஒடுக்கினார் இந்திரா. அதற்கு பழி வாங்கும் விதமாக, காவல் துறையில் இருந்த சீக்கிய அலுவலர்களால் பிரதமர் இந்திராகாந்தி படு கொலை செய்யப்பட்டார்.

அதனையடுத்து  இளைஞரான ராஜீவ் காந்தி இந்திய பிரதமராகவும், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவியேற்றார். அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 414 எம்.பிக்களை காங்கிரஸ் வென்று வரலாற்று சாதனை படைத்தது. மீண்டும் பிரதமராக பதவியேற்ற ராஜீவ் காந்தி, வி.பி.சிங், மாதவராவ் சிந்தியா, ராஜேஷ் பைலட், ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் போன்ற இளம் எம்.பிக்களை அமைச்சரவையில் சேர்த்து கொண்டார். இளைஞர்களுக்கு பல வகைகளில் உத்வேகம் அளித்தார்.

அறிவியல் தொழில் நுட்பம், நவீன இயந்திரங்கள், சூப்பர் கம்ப்யூட்டர், பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, விண்வெளியில் தன்னிறைவடைய கிரையோஜெனிக் இயந்திரம் வடிவமைக்க அப்துல் கலாம் உள்ளிட்ட அறிஞர்களை ஊக்குவிப்பு, என நவீன அறிவியல் தொழில் நுட்பத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துதலில் வெற்றி கண்டார்.

அரசு துறைகளில் தாமதத்தை குறைத்தார், உள்ளாட்சிகள் தனித்து செயல்பட பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை கொண்டு வந்தார். நாடு முழுவதும் தொலை தொடர்பு வசதியை வேகமாக பரவலாக்கினார்.கிராமப்புற மேம்பாடு, விவசாய மேம்பாடு, சுகாதார வசதியில் அதிக கவனம் செலுத்தினார்.

யானைக்கும் அடி சறுக்கும் என்பதை போல்., தாய் இந்திராவின் கொள்கையை மீறி தவறான வழிகாட்டுதலால், இலங்கையில் தமிழர் -சிங்களர் விவகாரத்தில்,சிங்களர்களுக்கு ஆதரவாக, இந்திய அமைதிப்படையை அனுப்பி சர்ச்சைக்குள்ளானார். மறுபுறம் போபர்ஸ் பீரங்கி கொள்முதலில் பிரதமருக்கு நெருக்கமானவர் என்று பேசப்பட்டதால்,எதிர்க்கட்சியினர் ஒன்று சேர்ந்து ராஜீவ் காந்தி என்ற பிம்பத்தை சிதைத்தனர்.

1989 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. ஜனதா கட்சி சார்பில் பாஜக ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமரானார். பிறகு காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமர் ஆனார். ஜனதா ஆட்சிகள் கவிழ்ந்த பின் 1991 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இம்முறை ஆட்சியில் தவறுகளை திருத்தி கொள்வேன் என்ற ராஜீவ் காந்தி மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த நிபுணர் குழுக்களை அமைத்தார். ஆட்சி அமைத்த பின் ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் காலத்தையும் குறிப்பிட்டார்.

மே.. 21 தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்னை வந்த ராஜீவ் காந்தி பூந்தமல்லியில் தன் தாயார் இந்திரா காந்தி சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சார மேடைக்கு சென்றபோது மாலை அணிவிக்க வந்த பெண், வெடிகுண்டை இயக்கியதால் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி. அவர் மறைந்த சில ஆண்டுகளில், மோட்டார் வாகன உற்பத்தி,எலக்ட்ரானிக் உற்பத்தி, என உலக வரைபடத்தில் இடம் பிடித்து ராஜீவின் கனவுகளை நனவாக்கி வருகிறது ஸ்ரீ பெரும்புதூர் என்றால் மிகையில்லை.


source https://news7tamil.live/rajiv-gandhi-laid-the-foundation-for-india-to-rise-to-the-top-in-digital-fields.html