21 5 23
நோட்டுகளை திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், திண்டுக்கல்லில் 2000 ரூபாய் நோட்டிற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மோடி தலைமையிலான மத்திய அரசு கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கெண்டுவந்தது. அதன்படி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது. இதனால் பெரும்பாலமான மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதனை தொடர்ந்து அதற்கு பதிலாக புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.
இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய பாஜக அரசை கண்டித்து திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2000 ரூபாய் நோட்டிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டபட்டுள்ளது.
அந்த போஸ்டரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மாதிரி அச்சிடப்பட்டு, அதன் கீழே பிறப்பு 8-11-2016, இறப்பு 19-05-2023, மத்திய பா.ஜ.க. அரசால் உருவாக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டு 19-05-2023 அன்று மாலையில் அகால மரணமடைந்தது. இறுதி ஊர்வலம் 20-05-2023 அன்று மாலை 4 மணிக்கு சாலை ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே நேற்று மாலை திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். அவர்கள் தங்களது கைகளில் கட்டு, கட்டாக 2 ஆயிரம் மாதிரி ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்திருந்தனர். பின்னர் பாடை கட்டி, அதில் நோட்டுகளை போட்டனர். இதைத்தொடர்ந்து பாடையை சுற்றி ஒப்பாரி வைத்தனர். அப்போது சங்கு ஊதி, மணி அடிக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது. அதன்பிறகு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது இந்த போஸ்டர், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும்
இந்த நிகழ்வு அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா
source https://news7tamil.live/congress-put-up-tearful-tribute-poster-for-rs-2000-note-in-dindigul.html