புதன், 24 மே, 2023

ஆளுனரை கண்டித்து போராட்டம் : புதுவையில் சமூக நல அமைப்பினர் கைது

 23 5 23

Puducherry
புதுச்சேரி

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

தமிழிசையை வெளியேற கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற சமூக நல அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என சுப்ரீம்கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய நிலையில், இந்த தீர்ப்பு டெல்லிக்கு மட்டுமே பொருந்தும், புதுவைக்கு பொருந்தாது என கவர்னர் தமிழிசை கருத்து தெரிவித்திருந்தார்.இதை கண்டித்தும், புதுவை அரசு நிர்வாகத்தில் தலையிடும் கவர்னர் தமிழிசை புதுவையை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் இன்று நடந்தது.

இதற்காக செஞ்சி சாலையில் சமூகநல அமைப்பினர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு திராவிடர் விடுதலை கழகம் லோகு அய்யப்பன் தலைமை வகித்தார். திராவிடர் கழகம் சிவவீரமணி, மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ்,

மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தமிழர் களம் அழகர், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, தமிழக வாழ்வுரிமைகட்சி ஸ்ரீதர், அம்பேத்கர்தொண்டர் படை பாவாடைராயன், தேசிய இளைஞர் முன்னணி கலைபிரியன், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம், பீ போல்ட் பஷீர்அகமது உட்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் ஊர்வலமாக கவர்னர் மாளிகை நோக்கி வந்தனர்.

அவர்களை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் அருகே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கைகளை வலியறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். ஒரு பெண் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-social-welfare-organization-protest-against-dovernor-tamilisai-in-puducherry-676834/