புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ரூ.970 கோடி செலவில் நான்கு மாடிகள் கொண்ட புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை வரும் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இதனை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கும், திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காததற்கும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதனை வெளிக்காட்டும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆத் ஆத்மி, ஆர்ஜேடி உள்ளிட்ட 19 அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன. திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளன.
இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை அழைக்காததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத்தலைவரை அழைக்காதது, இந்திய அரசியலமைப்பின் உட்சபட்ச பதவியை அவமதிக்கும் செயல்; ஈகோ என்ற கற்களால் கட்டப்பட்டது அல்ல நாடாளுமன்றம், அது இந்திய அரசியலமைப்பின் மாண்பினால் கட்டப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
source https://news7tamil.live/insult-to-the-position-of-the-constitution-of-india-rahul-gandhi-tweets-about-prime-minister-modi-inaugurating-the-new-parliament-building.html