11 5 23
டெல்லியில் அதிகாரிகளை நியமிக்க டெல்லி அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட் செய்துள்ளார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தற்போது ஆட்சி செய்து வரும் நிலையில், அந்த கட்சிக்கும் துணை நிலை ஆளுனருக்கும் இடையே பல விஷயங்களில் நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அதில் ஒன்றாக டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிப்பதில் யாருக்கு அதிகாரம் உண்டு என்பது தொடர்பான விவாதம் பல நாட்களாக இருந்து வந்ததை தொடர்ந்து, அவர்கள்
உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்நிலையில் இது குறித்தான வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா அடங்கிய அரசியல்சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில், டெல்லியில் துணைநிலை ஆளுநரை விட முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கிறது. டெல்லி அரசின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது, மேலும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்குள் அதிகாரிகள் இல்லை என்றால் அது அந்த அரசின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும்.
எனவே, டெல்லி அரசு அதிகாரிகள் மீது அதிகாரம் செலுத்த டெல்லி அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி இருந்தனர்.
இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் “டெல்லி மக்களுக்கு நீதி வழங்கிய மாண்புமிகு உச்ச நீதிமன்றத்திற்கு மனமார்ந்த நன்றி. இந்த முடிவால் டெல்லியின் வளர்ச்சி வேகம் பன்மடங்கு உயரும். ஜனநாயகம் வென்றது.”என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இன்று அரவிந்த் கெஜ்ரிவால்அமைச்சர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- பி.ஜேம்ஸ் லிசா
source https://news7tamil.live/democracy-won-arvind-kejriwal-is-happy-with-the-supreme-court-verdict.html