செவ்வாய், 9 மே, 2023

மாம்பழம்; ஆச்சரியமூட்டும் ’Mango Man Of India’!!!

 

பொதுவாக நாம் மல்கோவா, அல்போன்சா, ரூமாணி போன்ற மாம்பழங்களை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் சச்சின் டெண்டுல்கர் மாம்பழம், ஐஸ்வர்யா ராய் மாம்பழம், அமித்ஷா மாம்பழம் கேள்வி பட்டுருக்கீங்களா…

அட ஆமாங்க உத்தர பிரதேஷ் மாநிலத்தில் மாலிகாபாத் ஊரை சேர்ந்த கலீமுலா கான் தன்னுடைய தோட்டத்தில் 300 வகையான மாம்பழம் வளர்த்து அதற்கு பிரபலங்களுடைய பெயரையும் வைத்துள்ளார்.

முதலில் கலீமுலா கான் யாரென்று பார்ப்போம். இந்தியாவின் மாம்பழ மனிதன் என அழைக்கப்படும் கலிமுல்லா கான், உத்தர பிரதேஷ் மாநிலம் மாலிகாபாதில் 1940 இல் பிறந்தவர். இவர் 7ஆம் வகுப்பு படிக்கும் பொழுது தன் தந்தையின் ஊக்கத்தால் புதிய வகை மாம்பழங்களை உருவாக்கும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது, 300க்கும் மேற்பட்ட புதிய வகை மாம்பழங்களை உருவாக்கி அதற்காக 2008ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வெவ்வேறு வகையான மாம்பழங்களுக்கு வெவ்வேறு நபர்களுடைய குணங்கள் இருக்குமென்று கான் உறுதியாக நம்புகிறார். 2013-ல் இந்திய கிரிக்கேட் வீரரான சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பிறகு, அவரது பெயரில் புதிய வகை மாம்பழங்களை உருவாக்க கான் முடிவு செய்தார்.

அந்த மாம்பழம் சச்சின் டெண்டுல்கரின் நினைவாகவும், அவருடைய சிறந்த குணங்கள் அப்பழத்தில் இருக்கவேண்டும் எனவும் தன் மனதில் வைத்து கொண்டு உருவாக்கப்பட்டது என்று கான் தெரிவித்தார்.

இந்த வகை மாம்பழங்கள் மிகவும் பிரபலமாகி இன்று பலராலும் பேசப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷா பெயரில் மாம்பழத்தை உருவாக்கத் தான் மிகவும் சிரமப்பட்டதாகவும், அதிக சுவையுடன், வாசனையாக அதே சமயம் பெரியதாக இருக்கும் வகையில் தான் உருவாக்கியதாகவும் அவர் கூறினார்.

வழக்கமான ஒரு முறை மட்டுமே காய்க்கும் மாம்பழத்திற்குப் பதிலாக வருடத்திற்கு மூன்று முறையும் காய்க்கும் மாம்பழங்களை உருவாக்க வேண்டும் என்றாலும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்கள், மா சாகுபடிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும். பருவமழை, புயல் மற்றும் ஆலங்கட்டி மழை உள்ளிட்ட வானிலை பிரச்சனைகள் மா பயிர்களுக்குக் குறிப்பிடத்தக்கச் சேதத்தைப் பாதிக்கப்படாத ஒன்றை உருவாக்கவேண்டும் என்பதே தனது நோக்கம் என்றார்.

83 வயதாக இருந்தாலும், மாம்பழ சாகுபடியில் தொடர்ந்து புதிய வகை மாம்பழங்களை அவர் உருவாக்குவதும், மற்றவர்களையும் தன்னை போல் செயல்பட அவர் ஊக்கப்படுத்துவதும் மாம்பழத்தின் மீது அவர் வைத்துள்ள காதலை வெளிப்படுத்துகிறது என்றால் அது மிகையல்ல.


source https://news7tamil.live/tendulkar-aishwarya-rai-and-other-names-include-mango-amazing-mango-man-of-india.html

Related Posts: