தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து தென் மாநிலங்கள், இந்திய நாட்டின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்பாக மூன்றில் ஒரு பங்கை வழங்கும் செய்தி தொகுப்பை பார்க்கலாம்…
2022-23 ஆம் நிதியாண்டில், தென் மாநிலங்கள், GSDP எனப்படும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி அல்லது இந்திய நாட்டுக்கு அளிக்கும் பங்களிப்பு குறித்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தரவுகளின் அடிப்படையில், GSDP, ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அளவிடுவதற்கான மிக முக்கியமான அளவுகோளாகும்.
தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய ஐந்து தென் மாநிலங்கள், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பதுடன், மேற்கண்ட ஐந்து மாநிலங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் GSDP தரவுகள் அடிப்படையில், 2023 ஆம் நிதியாண்டில், தமிழ்நாடு 24.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன், தென்னிந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார சக்தி கொண்ட மாநிலமாக முதல் இடத்தில் உள்ளது. கர்நாடக மாநிலம் 22.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், தெலங்கானா 13.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் 3 ஆம் இடத்திலும் உள்ளது. 13.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் ஆந்திர மாநிலம் 4 ஆம் இடத்திலும், 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் கேரளா 5 ஆம் இடத்திலும் உள்ளது.
தனிநபர் வருமானத்தில், 2022 ஆம் ஆண்டு தரவுகளின்படி, 2 லட்சத்து 75 ஆயிரத்து 443 ரூபாயுடன் தெலங்கானா முதலிடத்திலும், 2 லட்சத்து 65 ஆயிரத்து 623 ரூபாயுடன் கர்நாடகா இரண்டாவது இடத்திலும், 2 லட்சத்து 41 ஆயிரத்து 131 ரூபாயுடன் தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளது. கேரளாவில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 601 ரூபாயாக உள்ளது. ஆந்திராவில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 771 ரூபாயாக உள்ளது. இந்திய அளவில் தனி நபர் சராசரி வருமானம் 1 லட்சத்து 50 ஆயிரத்து 7 ரூபாயாக உள்ளது. தென் இந்திய மாநிலங்கள் தேசிய சராசரியை விட அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தின் நிதி ஆரோக்கியத்தை கடன் – GSDP விகிதத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, தெலங்கானா – 25.3 சதவீதம், கர்நாடகா – 27.5 சதவீதம், தமிழ்நாடு – 27.7 சதவீதம், ஆந்திரா – 32.8 சதவீதம், கேரளா – 37.2 சதவீதம் என உள்ளது. நிதி ஆரோக்கியத்தில் தெலங்கானா முதலிடத்திலும், தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளது.
தென்னிந்தியாவில், அதிக வரி வருவாய் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் வரி வருவாய் 1 லட்சத்து, 26 ஆயிரத்து 644 கோடி, கர்நாடகாவின் வரி வருவாய் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 494 கோடி ரூபாய், தெலங்கானாவின் வரி வருவாய் 92 ஆயிரத்து 910 கோடி ரூபாய், ஆந்திராவின் வரி வருவாய் 85 ஆயிரத்து 265 கோடி ரூபாய், கேரளாவின் வரி வருவாய் 71 ஆயிரத்து 833 கோடி ரூபாயாக உள்ளது.
நிதி பற்றாக்குறை அடிப்படையில் பார்த்தால், கர்நாடகாவின் நிதிப்பற்றாக்குறை – 2.8 சதவீதம், ஆந்திரா – 3.2 சதவீதம், தமிழ்நாடு – 3.8 சதவீதம், தெலங்கானா – 3.9 சதவீதம், கேரளா – 4.2 சதவீதமாக உள்ளது. குறைந்த நிதிப்பற்றாக்குறை விகிதம், மாநிலத்தின் பொருளாதார வலிமையைக் குறிக்கிறது என சொல்லப்பட்டாலும், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு , செலவினங்களில் முதலீடு செய்வது முக்கிய காரணி என்பதை மறுப்பதற்கில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜிஎஸ்டி வருகைக்கு பின் தென் மாநிலங்களின் வருவாய் குறைந்த பின்பும், இந்திய நாட்டுக்கு 30 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்குவதை வியப்புடன் பார்க்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
- ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்
source https://news7tamil.live/southern-states-that-contribute-more-than-30-to-the-indian-economy-tamil-nadu-at-the-top.html