திங்கள், 8 மே, 2023

TN Plus 2 Results: ப்ளஸ் டூ ரிசல்ட்-ல் விருதுநகர், கன்னியாகுமரி டாப்; மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி

 

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 8) காலை 10 மணியளவில் வெளியானது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். பொதுத் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற்றது. 8.8 லட்சம் மாணவர்கள் 3,169 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று tnresults.nic.in என்ற அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 7,55,451 பேர் (94.03%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.45%, மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

08 05 2023

அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு தேர்ச்சி விகிதம் 97.85% ஆக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது. அதேபோல் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100% பேர் தேர்ச்சி பெற்றுள்ளது. மாற்றுத் திறனாளி மாணவர்கள் 89.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில். “தமிழில் 2 பேர் மட்டும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிக பட்சமாக கணக்குப் பதிவியலில் 6,573 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இயற்பியல் 812, வேதியியல் – 3909, உயிரியல் – 1494, கணினி அறிவியல் – 4618 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/education-jobs/tn-12th-results-update-virthunagar-secured-top-in-the-pass-percentage-662387/