சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காரில் அமர்ந்தபடி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது மிக்ஜாம் புயல் மழை வெள்ள நிவாரண நிதி குறித்தும், வங்கிக் கணக்கில் செலுத்தாமல், நேரடியாக பணமாக கொடுப்பது ஏன் எனவும் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த உதயநிதி, “வங்கிக் கணக்கில் செலுத்தினால் மினிமம் பேலன்ஸ் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. அதனால்தான் நேரடியாக பணமாக கொடுக்கிறோம்.
கோவிட் காலத்தில் இவ்வாறுதான் கொடுக்கப்பட்டது. அனைவருக்கும் இது சென்றடைந்தது. பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடக் கூடாது என மு.க. ஸ்டாலின் திட்டத்தின்படி கொடுக்கிறோம்” என்றார்.
இதையடுத்து மத்திய அமைச்சர் ஒருவர் அவர்கள் கேட்டவுடன் பணம் எடுத்துக் கொடுக்க நாங்கள் என்ன ஏடிஎமா? எனக் கேட்டுள்ளாரே என்ற கேள்விக்கு, “நாங்கள் என்ன அவர்கள் அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம்; தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வரிப்பணம் தானே? மற்ற மாநிலங்களுக்கு கேட்காமலே கொடுக்கிறிங்களே? தமிழ்நாட்டை மட்டும் ஏன் தனியா பார்க்குறீங்க? இதை தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்றார்.
புயல் நிவாரணப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.5,060 கோடி வேண்டும் என கேட்டிருந்தார். ஆனால் மத்திய அரசு ரூ.450 கோடி முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் உதயநிதி மத்திய அமைச்சருக்கு காட்டமான பதிலை கொடுத்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-has-given-a-befitting-reply-to-the-union-minister-on-the-relief-fund-issue-2021411