சனி, 3 பிப்ரவரி, 2024

அரசு விரைவு பேருந்து பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு... ஆன்லைன்ல டிக்கெட் புக் செஞ்சா ரூ 10 ஆயிரம் ரொக்கப் பரிசு!

 SETC: தமிழக அரசுப் பேருந்து டிக்கெட்டுகளின் ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்கும் முயற்சியில், போக்குவரத்துத் துறை ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. மேலும், அதிரடியான ரொக்கப் பரிசையும் அறிவித்துள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் (எஸ்.இ.டி.சி -SETC) பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் 3 பயணிகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் மூன்று பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.10,000 பரிசு வழங்க தமிழ்நாடு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. 

பயணச்சீட்டு முன்பதிவு தரவுத்தளத்தில் இருந்து பயணிகள் அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, போக்குவரத்துத் துறையின் தொழில்நுட்பப் பிரிவான பல்லவன் டிரான்ஸ்போர்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கடந்த மாதம் வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில் முன்பதிவு செய்து பயணித்தவர்களில் 3 பேரை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்ததாக தெரிவித்தார். அவர்களில் இசக்கி முருகன் (பயணசீட்டு எண்: T50959052) , சீதா (பயணசீட்டு எண்: T51210787), இம்தியாஸ் ஆரிப் (பயணசீட்டு எண்: T51655633) ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ரூ.10,000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகளை மேற்பார்வையிடும்  எஸ்.இ.டி.சி-யின் ஆதாரங்களின்படி, இந்த முயற்சி நிறைய பயணிகள் டிக்கெட் புக் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மற்ற நாட்களில், ஆன்லைன் முன்பதிவுகள் மொத்தம் 80,000 டிக்கெட்டுகளில் ஒரு நாளைக்கு 7,000 முதல் 8,000 டிக்கெட்டுகள் வரை மட்டுமே புக் செய்யப்படுகிறது. 

“கூடுதலாக 45 முதல் 50% முன்பதிவு செய்யப்படாத பயணிகளுடன், திங்கள் முதல் வியாழன் வரை ஆக்கிரமிப்பு விகிதம் 65% ஆக உள்ளது. இதை 85 முதல் 90% ஆக உயர்த்த விரும்புகிறோம்,” என்று கூறப்பட்டுள்ளது. 

80% டிக்கெட்டுகள் எஸ்.இ.டி.சி பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை டி.ன்.எஸ்.டி.சி நிறுவனங்களின் மொஃபுசில் சேவைகளுக்காக எனவும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். "தேவையை முன்கூட்டியே கணிப்பதன் மூலம், பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணியாளர்கள் மற்றும் பேருந்துகளை திறம்பட பயன்படுத்த முடியும். தற்போது, ​​நாங்கள் பெரும்பாலும் டெர்மினஸில் டிக்கெட் தேவையைப் பொறுத்து கூடுதல் சேவைகளில் ஈடுபடுகிறோம். 

வார இறுதி நாட்களில் சராசரி முன்பதிவு 25,000 ஆகவும், பொங்கல், தீபாவளி மற்றும் பிற பண்டிகை காலங்களில் 50,000 முதல் 60,000 ஆகவும் உயரும். வார இறுதி நாட்களுடன் (வெள்ளி முதல் ஞாயிறு வரை) விஷேச நாட்கள் வந்தால், தினசரி முன்பதிவு 40,000 ஐ எட்டலாம். மாநிலத்தில் பரவலான இணைய அணுகலைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் முன்பதிவு பயணிகளுக்கு தொந்தரவு இல்லாத விருப்பத்தை வழங்குகிறது. மேலும் கூடுதல் ஊக்கத்துடன் ரொக்கப் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. 

www.tnstc.in போர்ட்டல் அல்லது tnstc மொபைல் செயலி மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் ரொக்கப் பரிசுக்கு தகுதியுடையவர்கள்” என்றும் அவர் கூறியுள்ளார். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/book-setc-tickets-online-and-chance-to-win-rs-10000-in-tn-tamil-news-2472565