வெள்ளி, 14 ஜூன், 2024

கடந்த 10 ஆண்டுகளில் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை அரசு சீரழித்துள்ளது” – மல்லிகார்ஜுனே கார்கே!

 

“கடந்த 10 ஆண்டுகளில்,  போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் மோசடிகளால் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு சீரழித்துள்ளது” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே குற்றம்சாட்டியுள்ளார். 

நடைபெற்ற முடிந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், கருணை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு தேர்வுகள் முகமை முடிவு செய்துள்ளது.  இது குறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  “வெறும் கருணை மதிப்பெண்கள் மட்டும் பிரச்னை கிடையாது.  நீட் தேர்வுகளில் பல
முறைகேடுகள் நடந்துள்ளன. ஆவணங்கள் கசிந்துள்ளன. ஊழல் நடந்துள்ளது. மோடி அரசின் நடவடிக்கையால் நீட் தேர்வெழுதும் 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தேர்வு மையத்துக்கும்,  பயிற்சி மையத்துக்கும் இடையே பரஸ்பர உறவு உருவாகி,  ‘பணம் கொடு, பேப்பர் எடு’ என்ற விளையாட்டு நடந்து வருகிறது.  பிரதமர் மோடியின் அரசாங்கம் தனது நடவடிக்கைகளின் பொறுப்பை NTA வின் தோள்களில் சுமத்தி அதன் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது.  நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.

விசாரணைக்குப் பிறகு,  குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.  லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.  அவர்களின் கடினப்பட்டு உழைத்த நாட்கள் வீணாகாமல் காப்பாற்றப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில், காகித கசிவு மற்றும் மோசடியால் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு சீரழித்துள்ளது” என மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.


source https://news7tamil.live/modi-government-has-ruined-the-future-of-crores-of-youth-in-last-10-years-mallikarjune-kharge.html