இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக கடந்த மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில், கடந்த 4 ஆம் தேதி முன்கூட்டியே வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண் என பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.
பல்வேறு முறைகேடு புகார் கிளம்பி இருப்பதால் இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. அல்லது உச்ச நீதிமன்றம் மேற்பார்வையிலான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்திலும் நீட் முறைகேடு விவகாரம் எதிரொலித்தது. இந்த நிலையில், நீட் தேர்வு விவகாரம், வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை என்று தெரிவித்து ராகுல் காந்தி உருக்கமாக பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், “நீட் தேர்வு முறைகேடு நாட்டில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. இதுபோன்ற முறைகேடுகளால் மாணவர்களின் பல ஆண்டுகால கனவு உடைந்து சுக்குநூறாகியுள்ளது.
மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இரு அவைகளிலும் இது குறித்து விவாதிக்க வேண்டும் என முறையிட்டோம். 2 கோடி மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்னை குறித்த விவாதிக்க என்.டி.ஏ கூட்டணி அரசு தயாராக இல்லை.
தேர்வு நடத்தும் முறை உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை நாம் மாற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த முறைகேடுகள் தெளிவுப்படுத்தி உள்ளன. நீட் விலக்கு தீர்மானம் கொண்டு வருவதே ஒரே வழி, ஆனால், என்.டி.ஏ கூட்டணி அரசு இதற்கு ஒத்துழைக்கவில்லை.
இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி கையில் எடுத்து எங்களை வழி நடத்தி இருக்க வேண்டும், ஆனால் அப்படிப்பட்ட சூழல் தற்போது இல்லை என்பது புரிகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து விவாதித்து, நிரந்திர தீர்வு காண எதிர்க்கட்சியினர் தயாராக உள்ளோம்” என்று உருக்கமாக பேசியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-neet-2024-nta-video-tamil-news-4785010