சனி, 22 ஜூன், 2024

நான் முதல்வன்’ திட்டத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; தகுதி, தேர்வு முறை என்ன?

 நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு ஜூன் 23 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கி ஆட்சேர்ப்பு வாரியம் (IBPS), ரயில்வே (Railway) உள்ளிட்ட ஆட்சேர்ப்பு அமைப்புகளில் போட்டித் தேர்வுகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவை கடந்தாண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2024-2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் உரையில், மத்திய அரசு மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு உணவு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக “நான் முதல்வன் எஸ்.எஸ்.சி-ரயில்வே (SSC cum RAILWAYS) மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை’’ தொடங்க உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதிகள்

இந்தத் திட்டத்தில் இணைந்து பயிற்சி பெற, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 29 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 02.08.1995 க்கு முன் பிறந்தவராக இருக்க கூடாது. அதேநேரம் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை

இப்பயிற்சிக்கு 1,000 பயனாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக 14.07.2024 அன்று இருவேறு நுழைவுத் தேர்வுகள் நடைபெறும். அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

நுழைவுத் தேர்வு பாடத்திட்டம்

பொது அறிவு, திறனறி வினாக்கள், ஆங்கிலம், கணிதப் பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். வங்கி பணிப் பயிற்சிக்கு பொது அறிவுக்கு பதிலாக, வங்கி சார்ந்த வினாக்கள் இடம்பெறும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுக்களுக்கான பயிற்சி அல்லது எஸ்.எஸ்.சி-ரயில்வே தேர்வுக்களுக்கான பயிற்சி, ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் ரூ.3,000 கட்டணம் செலுத்த வேண்டும். பயிற்சி முடிந்ததும் இது திரும்ப அளிக்கப்படும். இந்தப் பயிற்சிக்கு தங்குமிடம் வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை

இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 23.06.2024

இந்தப் பயிற்சி தொடர்பான சந்தேகங்களுக்கு 9043710214 / 9043710211 என்ற அலைப்பேசி எண்கள் அல்லது nmssc_banking@naanmudhalvan.in  என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.


source https://tamil.indianexpress.com/education-jobs/naan-mudhalvan-scheme-invites-application-for-ssc-banking-railway-exams-free-coaching-4773589