ஞாயிறு, 30 ஜூன், 2024

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும்” – ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

 

பீகார் மாநிலத்துக்கு சிறப்புப் பிரிவு அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி கூடுதல் நிதியை மாநிலத்துக்கு வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால் இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை

இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத நிலையில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக்தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. மேலும் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடமும் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றாக ஐக்கிய ஜனதா தளம் விளங்குவதால் மீண்டும் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சி கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின்னர் இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:

“பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து என்ற கோரிக்கை இப்போது உருவானதல்ல. பீகார் மாநிலத்துக்கு ஏற்பட்டுள்ள சவால்களைச் சந்திப்பதற்கும், பீகார் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் இந்த கோரிக்கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். தற்போது நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்திலும் இதை வலியுறுத்தி தீர்மானம் இயற்றியுள்ளோம். இது ஒன்றும் புதிதல்ல.

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் குறித்தும் கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது. நாட்டில் முக்கியமான போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை மீட்டெடுத்தல், தேர்வு தகுந்த முறையில்செயல்படுத்தப்படுகிறது என்பதில் பெற்றோர், மாணவர்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துதல் கட்டாயமாகும்” இவ்வாறு அவர் கூறினார்.


source https://news7tamil.live/special-status-should-be-given-to-bihar-united-janata-dal-working-committee-meeting-resolution.html