வெள்ளி, 28 ஜூன், 2024

போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

 

போக்சோ வழக்கில் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா மீது சிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும்,  பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது 17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த போலீசார் விசாரிக்க தொடங்கினர். 

இந்த வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இதற்கிடையே தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றம் எடியூரப்பா மனு தாக்கல் செய்தார்.  அந்த மனுவை விசாரித்த விசாரித்த உயர்நீதிமன்றம் எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதனிடையே புகார் கொடுத்த அந்த 17 வயது சிறுமியின் தாய் திடீரென ஒரு நாள் மரணமடைந்தார்.  நுரையீரல் புற்றுநோய் காரணமாகத்தான் அவர் இறந்ததாகவும் தகவல்கள் வெளியானது.  தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக எடியூரப்பாவிடம் சிஐடி போலீசார் கடந்த 17ம் தேதி சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.  இந்த நிலையில் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில் சிஐடி போலீசார் இன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

source https://news7tamil.live/chargesheet-filed-against-yeddyurappa-in-pocso-case.html