ஞாயிறு, 23 ஜூன், 2024

வீதிகளில் மாடுகள் 3வது முறை பிடிபட்டால் ஏலம் விடப்படும் - சட்டப்பேரவையில் கே.என். நேரு அறிவிப்பு

 சென்னையில் வீதிகளில் நடந்து செல்பவர்களை மாடுகள் முட்டிய விவகாரம் தொடர்பாக கேள்விகள் எழுந்த நிலையில், “வீதிகளில் மாடுகள் முதல் முறை பிடிபட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் 2வது முறை ரூ.10,000 அபராதம் என்றும் 3வது முறை மீண்டும் பிடிபட்டால் மாடுகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வீதிகளில் மாடுகள் சுற்றி அலைவதை மிகவும் சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. இந்த மாடுகள் வீதிகளில் செல்பவர்களை திடீரென பாய்ந்து முட்டி கடும் காயத்தை ஏற்படுத்துகின்றன. 

அண்மையில், திருவொற்றியூரில் தெருவில் நடந்து சென்ற பெண்ணை ஒரு மாடு முட்டி இழுத்துச் சென்ற சி.சி.டிவி காட்சி பார்ப்பவர்களை பதற வைத்தது. இதனால், சென்னையில் வீதிகளில் மாடுகளை விடக் கூடாது என்ற குரல்கள் சமூக வலைதளங்களில் எழுந்தன.

அதே போல, பொது மக்கள் நாய்களால் கடிபடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. நாய்களால் கடிபடுவது பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. 

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் கே.என். நேரு,  “தெரு நாய்கள் பிரச்னை நிறைய வருகிறது. கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகள் சரியாக கையாள காரணத்தால் பிரச்னை வருகிறது.

வளர்ப்பு நாய்களை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. 78 பயிற்சி பெற்ற அலுவலர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இதில் அதிக கவனம் எடுத்துள்ளோம். நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி, மக்களை பாதுக்காக்கும் பணியை அரசு எடுக்கும்.

அதேபோல், மாடுகள் முதல் முறை பிடித்தல் 5000 ரூபாய், இரண்டாம் முறை பிடிக்கப்பட்டால் 10000  ரூபாய் அபராதம், மூன்றாவது முறையாக பிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்து ஏலம் விடப்படும். அதற்கான சட்டம் கொண்டு வரப்படும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என். நேரு, சென்னை மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அறிவித்தார். 

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் கே. என். நேரு மேலும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

அமைச்சர் கே.என். நேரு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:   “புதிகாக ரூ. 75 கோடி ஒதுக்கீட்டில் புதிய மாமன்ற கட்டிடம் கட்ட முதலமைச்சர் அனுமதி கொடுத்துள்ளார். தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் தற்போது இருக்கின்றன. பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்கப்படும்.

தமிழகத்தில் 138 நகராட்சிகள் உள்ளன. அவை 159 ஆக உயரும். 25 மாநகராட்சிகள் தற்போது இருக்கும் நிலையில், அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். 

கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக ரிப்பன் கட்டட வளாகத்தில் புதிய மாமன்றக்கூடும் ரூபாய் 75 கோடி மதிப்பீடு கட்டப்படும். தெரு நாய்கள் பிரச்சனை நிறைய வருகிறது. கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகள் சரியாக கையாள காரணத்தால் பிரச்சனை வருகிறது.  

பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் டவர் பூங்கா பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்” என்று அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-kn-nehru-announced-cattle-caught-on-streets-of-cities-for-3rd-time-will-be-auctioned-4775326